சென்னையில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம்-16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு


சென்னையில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம்-16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
x

கோப்பு படம்

சென்னையில் இந்து அமைப்புகள் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளுடன் பிரமாண்ட ஊர்வலம் இன்று நடக்கிறது.

சென்னை,

விநாயகர் சதுர்த்தி கடந்த 7-ந்தேதி விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதற்காக சென்னையில் இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் 1,524 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. இந்த சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கு 11, 14, (அதாவது நேற்று) மற்றும் 15-ந்தேதி (அதாவது இன்று) ஆகிய 3 நாட்கள் போலீசார் அனுமதி வழங்கியிருந்தனர்.சாலைகள், முக்கிய தெருக்களில் வைத்து பூஜிக்கப்பட்ட பெரிய விநாயகர் சிலைகளில் ஒரு பகுதி 11-ந்தேதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது.

நேற்றும் ஏராளமான சிலைகள் கடலில் கரைக்கப்பட்டது. தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்ட நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விநாயகர் சிலைகள் அதிக எண்ணிக்கையில் கரைக்கப்பட உள்ளது.இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, பாரத் இந்து முன்னணி மற்றும்பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகளுடன் பிரமாண்ட ஊர்வலம் நடைபெறுகிறது.

விநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட 17 வழித்தடங்களின் வழியாக மட்டுமே எடுத்து செல்ல போலீசார் உத்தரவிட்டுள்ளனர். ஊர்வலத்தில் எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் இருக்க, சிலை கரைப்பு இடங்களில் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.பெரிய சிலைகளை தூக்கி சென்று கடலில் கரைப்பதற்கு ராட்சத கிரேன்களும், படகுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விநாயகர் ஊர்வல பாதுகாப்பு பணியில் 16,500 போலீசாரும், 2 ஆயிரம் ஊர்காவல் படையினரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

1 More update

Next Story