ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருச்சி பொன்மலை மலையடிவாரம் சகாய மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் சரண்ராஜ். இவர் தனது நண்பர்களான தீபன், நவீன், விஜய், ராமகிருஷ்ணன் ஆகியோருடன் மலையடிவாரம் அந்தோணியார் கோவில் தெருவில் கடந்த மாதம் 13-ந்தேதி மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மலையடிவாரம் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த ரவுடியான ராஜா என்கிற கோப்பு ராஜா (வயது 27) என்பவர் அவர்களிடம் குடிப்பதற்கு மது கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அவர்கள் தர மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கோப்பு ராஜா அரிவாளால் சரண்ராஜ், தீபன், நவீன் ஆகிய 3 பேரையும் தாக்கினார். இதில் காயம் அடைந்த 3 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் பொன்மலை போலீசார் வழக்குப்பதிந்து கோப்பு ராஜாவை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் கோப்பு ராஜா மீது பொன்மலை போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதையடுத்து ஏற்கனவே சிறையில் உள்ள கோப்புராஜாவிடம் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான நகல் வழங்கப்பட்டது.