வீட்டில் கஞ்சா பதுக்கல்: 4 பேருக்கு தலா 10 ஆண்டு ஜெயில் - சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு


வீட்டில் கஞ்சா பதுக்கல்: 4 பேருக்கு தலா 10 ஆண்டு ஜெயில் - சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
x

போதைப்பொருள் பயன்படுத்தும் இளம்பருவத்தினரின் எண்ணிக்கை சமீபகாலமாக ஆபத்தான விகிதத்தில் உள்ளது என நீதிபதி தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையை அடுத்த ஜமீன் பல்லாவரம் ஈஸ்வரிநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பல்லாவரம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கடந்த 2015-ம் ஆண்டு அங்கு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வீட்டில் 56 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்த போலீசார் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் (வயது 61), தெய்வம் (49), கதிரேசன் (47), மணிமாறன் (47) ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை போதைப்பொருள் கடத்தல் சிறப்பு கோர்ட்டில் நீதிபதி ஜூலியட் புஷ்பா முன்னிலையில் நடந்தது. போலீசார் தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் கே.ஜே.சரவணன் ஆஜராகி வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, பாண்டியன் உள்பட 4 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் நீதிபதி தனது தீர்ப்பில்,

'போதைப்பொருள் பயன்பாடு என்பது ஒரு சமூக நோய். போதைப்பொருள் கடத்தல் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்த்துவது மட்டுமல்லாமல், போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணம் பயங்கரவாதம் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. போதைப்பொருள் பயன்படுத்தும் இளம்பருவத்தினரின் எண்ணிக்கை சமீபகாலமாக ஆபத்தான விகிதத்தில் உள்ளது. இது ஒட்டுமொத்த சமூகத்திலும் கொடிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது' என கூறி உள்ளார்.

1 More update

Next Story