இஞ்சி விலை உயர்வு


இஞ்சி விலை உயர்வு
x
தினத்தந்தி 5 July 2023 4:29 PM GMT (Updated: 6 July 2023 9:54 AM GMT)

திருப்பூர் மாநகரில் உள்ள மார்க்கெட்டுகளில் இஞ்சி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ இஞ்சி ரூ.280-க்கு விற்பனையாகியது.

திருப்பூர்

கிடு, கிடு உயர்வு

விலை அதிகரிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் தக்காளி பேசும் பொருளாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது கிடு,கிடு விலை உயர்வால் இஞ்சியும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளது. திருப்பூர் தென்னம்பாளையம், காட்டன் மார்க்கெட் உள்ளிட்ட காய்கறி மார்க்கெட்டுகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ இஞ்சி ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் கடந்த ஒரு வாரமாக ரூ.200-ல் இருந்து ரூ.240 வரைக்கும் விற்பனையானது. இந்த நிலையில் நேற்று இதன் விலை ரூ.280-க்கு சென்றது. இவ்வாறு கிடு, கிடுவென விலை அதிகரித்துள்ளதால் இஞ்சி விற்பனை மந்தமாக இருந்து வருகிறது. பூண்டு ரூ.200, நாட்டு பூண்டு ரூ.120-க்கும் தக்காளி, சின்ன வெங்காயம், பீன்ஸ், அவரை ஆகியவை தலா ரூ.120-க்கும் விற்பனை செய்யப்பட்டன. பவானி கத்தரி ரூ.90, வரி கத்தரி மற்றும் வெண்டை ரூ.60, கேரட் ரூ.80, பெரிய வெங்காயம் ரூ.30, ஊட்டி உருளைகிழங்கு ரூ.60, சாதா உருளை ரூ.30 ஆகிய விலைகளிலும் விற்பனை செய்யப்பட்டன.

இல்லத்தரசிகள் கவலை

இதேபோல் முட்டைகோஸ் ரூ.30, சவ்சவ் காய் ரூ.40, பாகற்காய் ரூ.80, முருங்கை ரூ.80, முள்ளங்கி ரூ.40, வெள்ளரி ரூ.60, புடலை ரூ.40, பீர்க்கங்காய் ரூ.60, பீட்ரூட் ரூ.60, மாங்காய் ரூ.40 ஆகிய விலைகளிலும் விற்பனை செய்யப்பட்டன. இதில் பச்சை மிளகாய் மட்டும் விலை குறைவாக இருந்தது. கடந்த சில தினங்களாக ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்ட பச்சை மிளகாய் நேற்று ரூ.110-ஆக குறைந்தது. திருப்பூரில் பெரும்பாலான காய்கறிகளின் விலை அதிகமாக இருப்பதால் இல்லத்தரசிகள் கவலையில் உள்ளனர். காய்கறிகளின் விலை குறைந்து எப்போது நாம் நிம்மதியாக, நிறைவாக சமையல் செய்வோமோ? என்ற எதிர்பார்ப்புடன் இல்லத்தரசிகள் உள்ளனர்.


Next Story