கோபி மொடச்சூர் தான்தோன்றி அம்மன் கோவில் குண்டம் விழா;திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்


கோபி மொடச்சூர் தான்தோன்றி அம்மன் கோவில் குண்டம் விழா;திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 29 Dec 2022 9:43 PM GMT (Updated: 29 Dec 2022 9:44 PM GMT)

கோபி மொடச்சூர் தான்தோன்றி அம்மன் கோவில் குண்டம் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஈரோடு

கடத்தூர்

கோபி மொடச்சூர் தான்தோன்றி அம்மன் கோவில் குண்டம் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தான்தோன்றி அம்மன் கோவில்

கோபி மொடச்சூரில் பிரசித்தி பெற்ற தான்தோன்றி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா கடந்த 14-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 26-ந் தேதி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும், 28-ந் தேதி பெண்கள் மாவிளக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை 3 மணி அளவில் அம்மை அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து காலை 8 மணி அளவில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

குண்டம் விழா

முதன் முதலாக கோவில் தலைமை பூசாரி ராஜகோபால், குண்டம் இறங்கினார். இதைத்தொடர்ந்து திரளான ஆண், பெண் பக்தர்கள் குண்டம் இறங்கி தீ மிதித்து தங்களுடைய நேர்த்திக்கடன்களை செலுத்தினர். மேலும் பல பக்தர்கள் தங்களுடைய கைக்குழந்தைகளுடன் குண்டம் இறங்கியது, அங்கிருந்த மற்ற பக்தர்களை பக்தி பரவசப்படுத்தியது.

குண்டம் விழாவில் கோபி, மொடச்சூர், வேட்டைக்காரன் கோவில், வடுகபாளையம், வடுகபாளையம் புதூர், நாகர்பாளையம், நாகதேவன்பாளையம், நாதிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

தேரோட்டம்

இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு தேரோட்டமும், நாளை (சனிக்கிழமை) மலர் பல்லக்கு நிகழ்ச்சியும், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தெப்பத்தேர் உற்சவமும், மஞ்சள் நீர் உற்சவமும் நடைபெறுகிறது. இதையடுத்து 2-ந் தேதி மறுபூஜையும், 6-ந் தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

இதேபோல் கோபி அருகே உள்ள கொளப்பலூர் பச்சைநாயகி அம்மன் கோவில் குண்டம் விழா நேற்று நடைபெற்றது.


Next Story