அரசு பள்ளி ஆசிரியையிடம் தங்க சங்கிலி பறிப்பு
அரசு பள்ளி ஆசிரியையிடம் தங்க சங்கிலி பறித்த மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெரம்பலூரில் கலெக்டர் அலுவலக சாலையில் வசித்து வருபவர் அசோக்குமார். இவரது மனைவி உமா (வயது 54). குன்னம் தாலுகா பீல்வாடி அரசு தொடக்கப்பள்ளியில் உமா ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் நாள்தோறும் பெரம்பலூரில் இருந்து தனது ஸ்கூட்டரில் பள்ளிக்கு சென்று திரும்புவது வழக்கம். நேற்று மாலை உமா, தனது பள்ளியில் பணி முடித்துகொண்டு, பீல்வாடியில் இருந்து ஸ்கூட்டரில் அருமடல் சாலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே அடையாளம் தெரியாத மர்ம ஆசாமி தனது மோட்டார் சைக்கிளில் காற்று இறங்கிவிட்டதாக கூறி உதவி கேட்டுள்ளார். உடனே உமா தனது ஸ்கூட்டரை நிறுத்தியுள்ளார். இந்த சமயத்தில் அந்த மர்ம ஆசாமி திடீரென்று உமா அணிந்திருந்த 6½ பவுன் தாலிக்கொடியை பறித்துகொண்டு, மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக உமா அளித்த புகாரின் பேரில் மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாலிச்சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.