கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் விற்கப்படுகின்றன-சிறை அங்காடியை பொதுமக்களும் பயன்படுத்தி கொள்ள முன்வர வேண்டும்- மதுரை சரக டி.ஐ.ஜி. பேட்டி


கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் விற்கப்படுகின்றன-சிறை அங்காடியை பொதுமக்களும் பயன்படுத்தி கொள்ள முன்வர வேண்டும்-  மதுரை சரக டி.ஐ.ஜி. பேட்டி
x

கைதிகள் தயாரித்த பொருட்களை வாங்க சிறை அங்காடிகளை பொதுமக்களும் பயன்படுத்தி கொள்ள முன்வர வேண்டும் என மதுரை சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி கூறினார்.

மதுரை


கைதிகள் தயாரித்த பொருட்களை வாங்க சிறை அங்காடிகளை பொதுமக்களும் பயன்படுத்தி கொள்ள முன்வர வேண்டும் என மதுரை சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி கூறினார்.

கணினி மயமாக்கும் திட்டம்

மதுரை மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச்சிறையில் இயங்கி வரும் சிறைவாசிகள் அங்காடிகள் கணினிமயமாக்கப்பட்டு, கைரேகை பதிவு அடிப்படையில் பொருட்கள் விற்பனை செய்யும் திட்டத்தை மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி நேற்று தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரை மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச்சிறைகளில் சிறைவாசிகள் அங்காடி செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு அனுமதித்துள்ள பொருட்கள் சிறைவாசிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த அங்காடி தற்போது முற்றிலும் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. அதன்மூலம், சிறைவாசிகள் தங்கள் விரல் ரேகையை பதிவு செய்து அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். மேலும் சிறைவாசிகளின் கணக்கு விவரங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. இதனால் சிறைவாசிகள் தங்கள் கணக்கில் உள்ள தொகை, செலவு குறித்து உடனுக்குடன் தெரிந்து கொள்ளமுடியும்.

மேலும், அவர்கள் வாங்கும் பொருட்களுக்கு ரசீதும் வழங்கப்படுகிறது. சிறையில் முதல் வகுப்பு சிறைவாசிகள் வாரத்திற்கு ரூ.1000, இதர சிறைவாசிகள் வாரத்திற்கு ரூ.750-க்கும் வேண்டிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

சிறை அங்காடி

இதுதவிர மத்திய சிறையின் வாசல் பகுதியில் சிறைச்சந்தை இயங்கி வருகிறது. இங்கு கைதிகளால் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதுபோல், உணவகம், இனிப்பு வகைகள், துணிகள், மர கைவினைப்பொருள்கள், இரும்பு மற்றும் மரத்தினாலான வீட்டு உபயோகப்பொருள்களும் விற்பனை செய்யப்படுகிறது.

சிறைச்சந்தை சிறைக்காவலர்களுக்கானது என்ற எண்ணம் பொதுமக்களிடம் இருப்பதால் அவர்கள் அதிகம் இங்கு வருவதில்லை. சிறைச்சந்தை முற்றிலும் பொதுமக்களுக்கானது. சிறைச்சந்தையை பொது மக்களும் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும். சிறைச்சந்தையில் விற்பனை மூலம் கிடைக்கும் லாபத்தில் 20 சதவீதம் கைதிகளுக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய சிறைகளையும் விட மதுரை மத்திய சிறை மூலம் நடத்தப்படும் சிறைச்சந்தை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன் தொடர்ச்சியாக, மதுரை மத்திய சிறைக்கு உட்பட்ட அனைத்து மாவட்டச் சிறைகளிலும் சிறைச்சந்தை விரைவில் திறக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தியான பயிற்சி

சர்க்கரை நோய் உள்ள கைதிகளுக்கு டாக்டர்கள் வழங்கும் உணவு வகைகள் தான் வழங்கப்படுகின்றன. கைதிகளுக்கு 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வுகள் எழுதுவதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் பட்டப்படிப்பு படிக்க விருப்பம் உள்ள கைதிகளுக்கும் உதவி அளிக்கப்படுகிறது. தினசரி யோகா மற்றும் தியானப்பயிற்சி அளிக்கப்படுகிறது.

மதுரை மத்திய சிறையில் இருந்து கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்துச்செல்ல சிறைக்கு வரும் ஆண் மற்றும் பெண் காவலர்கள் பயன்பாட்டுக்காக, கழிப்பறைகள் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டு நவீன கழிப்பறையாக மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சிறைத்துறை சூப்பிரண்டு (பொறுப்பு) பரசுராமன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story