லாரி மோதி அரசு பஸ் டிரைவர் பலி- பொதுமக்கள் சாலை மறியல்


லாரி மோதி அரசு பஸ் டிரைவர் பலி- பொதுமக்கள் சாலை மறியல்
x

குடியாத்தம் அருகே லாரி மோதியதில் அரசு பஸ் டிரைவர் பலியானார். நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேலூர்

லாரி மோதியது

குடியாத்தத்தை அடுத்த கல்லப்பாடி மோட்டூர் அருகே உள்ள ஸ்ரீராமுலுபட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவரது மகன்கள் எழிலரசன் (வயது 35), தங்கப்பாண்டியன் (32). எழிலரசன் அரசு பஸ் டிரைவராக வேலைபார்த்து வந்தார். தங்கப்பாண்டியன் விவசாயம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை அண்ணன்,தம்பி இருவரும் வீட்டின் அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான புளிய மரங்களை சிலர் வெட்டிக்கொண்டு இருந்தனர். இந்த நேரத்தில் ஆந்திர மாநிலத்தில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு சிமெண்டு மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி வந்துள்ளது. புளியமரத்திலிருந்து கட்டைகளை வெட்டி கீழே போட்டதால் இடது புறத்திற்கு பதிலாக வலது புறமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து அங்கு அமர்ந்திருந்த எழிலரசன் மற்றும் தங்கபாண்டியன் மீது மோதி அருகே இருந்த குடிசை மீது மோதி நின்றது.

அரசுபஸ் டிரைவர் பலி

இதில் பலத்த காயமடைந்த இருவரையும் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து எழிலரசனை வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.

அதைத்தொடர்ந்து மரத்தை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் இறந்தவருக்கு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வகுமார் உள்ளிட்டோர் சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனைத்தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

இந்த விபத்து தொடர்பாக பரதராமி போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். விபத்தில் பலியான எழிலரசன் அ.தி.மு.க. பிரமுகர் ஆவார்.இவருக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.

துணைத்தலைவர் மீது வழக்கு

கல்லப்பாடி ஊராட்சி மன்ற துணைத் தலைவராக மோகன் என்பவர் உள்ளார். இவர் திங்கட்கிழமை குடியாத்தம்- சித்தூர் நெடுஞ்சாலையில் ஸ்ரீராமுலுப்பட்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான புளிய மர கிளைகளை தன்னிச்சையாக சட்டவிரோதமாக வெட்டி சாலையில் போட்டுள்ளார். இதனால் அந்த வழியாக வரும் கனரக வாகனங்கள் இடது புறமாக செல்வதற்கு பதில் வலது புறமாக சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டு பஸ் டிரைவர் எழிலரசன் பலியானார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து குடியாத்தம் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் யோகராஜ் பரதராமி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் கல்லப்பாடி ஊராட்சி மன்ற தணைத்தலைவர் மோகன் மீது பரதராமி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story