புதிய வழித்தடத்தில் அரசு பஸ் போக்குவரத்து
புதிய வழித்தடத்தில் அரசு பஸ் போக்குவரத்து தொடங்கியது.
புதிய வழித்தடத்தில் அரசு பஸ் போக்குவரத்துஅரியலூரில் அரசு கலைக்கல்லூரி, ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு புதிய வழித்தடத்தில் பஸ்கள் இயக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று முதல்-அமைச்சரின் உத்தரவின்படி அரியலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து அரியலூர் அரசு கலைக் கல்லூரிக்கு புதிய வழித்தடத்தில் அரசு பஸ் போக்குவரத்து தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார். சின்னப்பா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டியும், கொடியசைத்தும் பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். பின்னர் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் அவர் பயணம் செய்து, அவர்களிடம் பேசினார். அப்போது மாணவ, மாணவிகள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிய முதல்-அமைச்சருக்கும், அமைச்சருக்கும் நன்றி தெரிவித்தனர்.
இந்த பஸ் அரியலூர் அரசு கலைக்கல்லூரி, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ரெயில் நிலையம் வரை சென்று மீண்டும் பஸ் நிலையத்தை வந்தடையும். மேலும் அரசு பஸ் வழித்தட எண்கள் 012ஏ, 017ஏ ஆகியவை தினமும் காலை 8.50 மணிக்கும், 022ஏ காலை 9 மணிக்கும், 018ஏ மதியம் 12.45 மணிக்கும், 021ஏ, 017ஏ ஆகியவை மதியம் 1.25 மணிக்கும் அரியலூர் பஸ் நிலையம் எதிரே உள்ள அண்ணா சிலையில் இருந்து புறப்பட்டு முறையே காலை 9 மணி, 9.10 மணி, மதியம் 1 மணி, 1.35 மணி ஆகிய நேரங்களில் அரசு கலைக்கல்லூரியை சென்றடையும். அந்த பஸ்கள் மீண்டும் முறையே காலை 9.10 மணி, 9.20 மணி, மதியம் 1.20 மணி, 1.45 மணி, 1.50 மணிக்கு அண்ணா சிலையை வந்தடையும். அரசு கலைக்கல்லூரிக்கு காலையில் கல்லூரி தொடங்கும் நேரம் மற்றும் மதியம் கல்லூரி முடிவடையும் நேரங்களில் 6 டவுன் பஸ்கள் மூலம் தினசரி 12 நடைகள் கூடுதலாக இயக்கப்படுகிறது. இந்த வசதியை மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.