அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; 5 பயணிகள் காயம்


அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; 5 பயணிகள் காயம்
x

அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; 5 பயணிகள் காயமடைந்தனர்.

அரியலூர்

செந்துறை:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் இருந்து திட்டக்குடி நோக்கி நேற்று ஒரு அரசு பஸ் சென்றது. அந்த பஸ்சை டிரைவர் பழனிவேல் ஓட்டினார். அந்த பஸ்சில் 23 பயணிகள் பயணம் செய்தனர். இதேபோல் திட்டக்குடியில் இருந்து செந்துறை நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று வந்தது. 11 பயணிகள் பயணம் செய்த அந்த பஸ்சை டிரைவர் பார்த்தசாரதி ஓட்டி வந்தார். செந்துறை அருகே உள்ள நல்லநாயகபுரம் கிராமத்தில் பஸ் நிறுத்தம் முன்பு வந்தபோது அந்த பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் 2 பஸ்களின் முன் பக்க கண்ணாடிகளும் உடைந்து நொறுங்கின. மேலும் பஸ்களில் பயணம் செய்த 5 பயணிகள் காயமடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்த செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்த பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செந்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அந்த பயணிகளில் அங்கனூர் கிராமத்தை சேர்ந்த நாராயணன், சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்த ராஜாமணி ஆகியோர் மேல்சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த பகுதியில் சாலை வளைவின் ஓரத்தில் கட்டிட வேலைக்காக செங்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அந்த சாலையில் வாகனங்களில் வருபவர்களுக்கு, எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு உயரமாக அந்த கற்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் விபத்து ஏற்பட்டதா? என்பது உள்ளிட்ட கோணங்களில் விபத்துக்கான காரணம் குறித்து செந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story