விளையாட்டு மைதானத்தை மீட்டு தரக்கோரி அரசு பள்ளி மாணவர்கள் சாலை மறியல்


விளையாட்டு மைதானத்தை மீட்டு தரக்கோரி அரசு பள்ளி மாணவர்கள் சாலை மறியல்
x
Sagadevan M 12 Feb 2023 6:06 AM GMT

தனியாரிடமிருந்து விளையாட்டு மைதானத்தை மீட்டு தரக்கோரி எண்ணூரில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை

சென்னை எண்ணூரில் உள்ள கத்திவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு விளையாட்டு மைதானம் போதுமானதாக இல்லை. இதையடுத்து கடந்த 1993-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது பள்ளிக்கு அருகாமையில் உள்ள நிலத்தை தனியாரிடம் இருந்து நில ஆர்ஜிதம் செய்து மேல்நிலைப் பள்ளியின் பயன்பாட்டுக்காக கல்வித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து மாணவ, மாணவிகள் அந்த இடத்தை விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்தனர். ஆனால் இந்த நில ஆர்ஜிதத்தை எதிர்த்து சம்பந்தப்பட்ட தனியார், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பள்ளி நிர்வாகம் தரப்பில் நீதிமன்ற நகர்வுகளை முறையாக கடைபிடிக்காததால் ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலத்தை சம்பந்தப்பட்ட தனியார், கோர்ட்டு மூலம் திரும்ப பெற்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனியாரின் நிலம் குறித்து நில அளவை செய்ய வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று காலை பள்ளிக்கு வந்தனர். இதை கேள்விப்பட்ட பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் தலைமையில் எண்ணூரில் உள்ள அனைத்து கிராமம் மற்றும் குடியிருப்போர் நல சங்கங்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அரசு மேல்நிலை பள்ளி வாயில் முன்பு ஒன்று கூடினர்.

பின்னர் கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நில அளவை செய்வதை நிறுத்த வேண்டும். பள்ளியின் விளையாட்டு மைதானத்தை தனியாரிடமிருந்து மீட்டு தரவேண்டும் என்று கூறி கையில் பதாகைகளை ஏந்திய வண்ணம் கோஷமிட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.சங்கர், தொலைபேசி மூலம் மாவட்ட கலெக்டர், தாசில்தார் அருள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி மைதானம் அவசியம் குறித்து அறிவுறுத்தி மைதானத்தை மீட்க ஒத்துழைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அதைதொடர்ந்து எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் பிரம்மானந்தம் போராட்டக்காரர்களிடம் நிலத்தை மீட்க சட்டப்பூர்வமாக நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என்று சமாதானம் செய்தார். அதை ஏற்று சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சுமார் 3 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story