'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் கல்லூரிச்சுற்றுலா சென்ற அரசுப்பள்ளி மாணவ-மாணவிகள்


நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரிச்சுற்றுலா சென்ற அரசுப்பள்ளி மாணவ-மாணவிகள்
x

‘நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளி மாணவ-மாணவிகள் கல்லூரிச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் உயர்கல்வி படிப்புகள் குறித்து நேரில் கேட்டறிந்தனர்.

சென்னை

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியை தேர்வு செய்து படிப்பதில் ஆர்வத்தை தூண்டும் வகையில் கல்வித்துறை சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்தவகையில் அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளை அவர்கள் பள்ளிகளுக்கு அருகில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் சென்று உயர்கல்வி படிப்புகள், கல்லூரி வளாகம் மற்றும் அதன் செயல்பாடுகள், வகுப்பறைகள், கலையரங்கம், நூலகங்கள், விளையாட்டு மைதானம் ஆகியவற்றை சுற்றி காண்பிக்கும் வகையில் கல்லூரிச்சுற்றுலா அழைத்துச் செல்ல பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. இதற்கு 'களப்பணி' என்றும் கல்வித்துறை பெயரிட்டு இருந்தது.

அதன்படி, ஒவ்வொரு பள்ளியிலும் இருந்து 10 முதல் 15 மாணவ-மாணவிகளை அருகில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டது. அடுத்த மாதம் (மார்ச்) 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு செய்முறைத்தேர்வு தொடங்க உள்ள நிலையில் 27-ந்தேதிக்குள் இதனை மேற்கொள்ள பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்தநிலையில், சென்னை மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்களை கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அந்தவகையில் சென்னையில் ஒவ்வொரு அரசுப்பள்ளிகளில் இருந்தும் சுமார் 10 முதல் 15 மாணவர்கள், 2 ஆசிரியர்களுடன் சென்றனர்.

தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களில் பெரும்பாலானோர் குறைந்த வருமானம், அப்பா அல்லது அம்மா இல்லாதவர்கள் என்ற குடும்ப பின்னணியிலும், அடிக்கடி பள்ளிக்கூடத்துக்கு வராமல் இருப்பவர்கள் எனவும், படிப்பில் மிகுந்த ஆர்வமுள்ளவர்கள் எனத்தேர்வு செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

சென்னையைப் பொறுத்தவரையில், அண்ணா பல்கலைக்கழகம், குரோம்பேட்டை எம்.ஐ.டி. வளாகக்கல்லூரிகளுக்கு மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளும், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவக்கல்லூரிக்கு சென்னை மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளும், இதேபோல் லயோலா கல்லூரி உள்பட சில கல்லூரிகளுக்கும் மாணவ-மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அந்தந்தக்கல்லூரி டீன், முதல்வர்கள், பேராசிரியர்கள், துறை சார்ந்த அதிகாரிகள், கல்லூரி மாணவர்கள் என அனைவரும் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்புகள் என்னென்ன? எந்தெந்த படிப்புகளை படித்தால் என்ன வேலை கிடைக்கும்?, உயர்கல்வியை ஆர்வமாக தேர்வு செய்வது எப்படி? என்பது போன்ற பல்வேறு அறிவுரைகள் நேரடியாக இதன் மூலம் வழங்கப்பட்டன.

சென்னையில் மொத்தம் 56 அரசுப்பள்ளிகளில் இருந்து சுமார் 600 மாணவ-மாணவிகள் இதில் பங்கேற்று பயன் அடைந்திருக்கின்றனர். இதேபோல், தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களிலும் அரசுப்பள்ளி மாணவ-மாணவிகள் அருகில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதுகுறித்து பயன் அடைந்த மாணவிகள் காவியா காமேஸ்வரி, நிவேதா கூறுகையில், 'இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உயர்கல்வி படிப்புகள் குறித்த தெளிவு எங்களுக்கு கிடைத்தது. ஒவ்வொரு படிப்பையும் எவ்வாறு தேர்வு செய்யவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தனர். என்ன மாதிரியான படிப்புகளை படித்தால் வேலை கிடைக்கும்? என்பதையும் எடுத்துக் கூறினார்கள்' என்றனர்.


Next Story