கவர்னரும், முதல்-அமைச்சரும் இணைந்து செயல்பட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் பேட்டி
கவர்னரும், முதல்-அமைச்சரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கோவை,
கோவை விமான நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
கவர்னர் ஆர்.என்.ரவியும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் இணைந்து செயல்பட வேண்டும். கவர்னர் நடுநிலையாகவும், தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும் செயல்பட வேண்டும். முதல்-அமைச்சர் என்ன சொல்கிறாரோ, அதை செயல்படுத்த வேண்டியது கவர்னரின் கடமை.
கர்நாடகாவில் நடப்பது அரசியல் கூட்டம், அதில் முதல்-அமைச்சர் பங்கேற்கலாம். கூட்டத்தில் மேகதாது விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆறுகளிலும் 10 கிலோ மீட்டருக்கு தடுப்பணைகள் கட்ட வேண்டும்.
தமிழ்நாட்டில் நீர்பாசன திட்டங்கள் மற்றும் நீர் மேலாண்மைக்கு தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மேகதாது அணை தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி 'அணையை கண்டிப்பாக கட்டுவோம்' என கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. 50 ஆண்டுகால திராவிட ஆட்சி நீர்மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.