நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
விபத்தில் பாதிக்கப்பட்ட வாலிபருக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
செஞ்சி:
செஞ்சி தாலுகா கொசப்பாளையத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(வயது 33). இவர் தனது மோட்டார் சைக்கிளில் கடந்த 24.1.2012 அன்று கொசப்பாளையம் கிராமத்தில் இருந்து முட்டத்தூருக்கு புறப்பட்டார். அப்போது விழுப்புரத்தில் இருந்து செஞ்சி நோக்கி வந்த அரசு பஸ் மோதியதில் ராதாகிருஷ்ணன் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேலும் ராதாகிருஷ்ணன் நஷ்டஈடு கேட்டு செஞ்சி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, விபத்தில் படுகாயம் அடைந்த ராதாகிருஷ்ணனுக்கு ரூ.2 லட்சத்து 83 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டத்திற்கு உத்தரவிட்டார்.
ஆனால் குறிப்பிட்ட தேதிக்குள் அவருக்கு நஷ்டஈடு வழங்கவில்லை. எனவே ராதாகிருஷ்ணன் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த செஞ்சி சார்பு நீதிமன்ற நீதிபதி நளினகுமார், விபத்தில் பாதிக்கப்பட்ட ராதாகிருஷ்ணனுக்கு வட்டியுடன் சேர வேண்டிய ரூ.5 லட்சத்து 16 ஆயிரத்து 784 வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி விழுப்புரத்தில் இருந்து செஞ்சிக்கு வந்துகொண்டிருந்த அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.