விபத்தில் விவசாயி படுகாயம்:நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்திகடலூர் கோர்ட்டு நடவடிக்கை


விபத்தில் விவசாயி படுகாயம்:நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்திகடலூர் கோர்ட்டு நடவடிக்கை
x

விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது

கடலூர்


காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள சோழத்தரம் திம்மசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆளவந்தார் மகன் ரவிச்சந்திரன் (வயது 49). விவசாயி. இவர் கடந்த 5.10.2013 அன்று மாட்டு வண்டியில் அணைக்கரை-சோழத்தரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த காஞ்சீபுரம் போக்குவரத்து கோட்டத்துக்கு உட்பட்ட அரசு பஸ், மாட்டு வண்டி மீது மோதியதில் ரவிச்சந்திரன் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் நஷ்டஈடு கேட்டு கடலூர் மூத்த வக்கீல் சிவமணி, வக்கீல்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் மூலம் கடலூர் முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 27.3.2017 அன்று ரவிச்சந்திரனுக்கு நஷ்ட ஈடாக ரூ.3 லட்சத்து 43 ஆயிரத்து 100 வழங்க உத்தரவிட்டார். ஆனால் சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகம், நஷ்டஈடு வழங்கவில்லை. இதனால் ரவிச்சந்திரன், நீதிமன்றத்தில் நிறைவேற்று மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மோகன்ராஜ், விபத்தில் படுகாய மடைந்த ரவிச்சந்திரனுக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.4 லட்சத்து 89 ஆயிரம் நஷ்டஈடு வழங்கவும், இல்லையெனில் சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ்சை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டார். இருப்பினும் இதுவரை நஷ்டஈடு வழங்கப்படவில்லை. இதையடுத்து நேற்று கடலூர் பஸ் நிலையத்திற்கு வந்த காஞ்சீபுரம் கோட்டத்துக்கு உட்பட்ட அரசு பஸ்சை, ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.


Next Story