நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
விபத்தில் பள்ளி மாணவி இறந்ததற்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
செய்யாறு
விபத்தில் பள்ளி மாணவி இறந்ததற்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
பள்ளி மாணவி பலி
திருவண்ணாமலை மாவட்டம் பெரியவேளியநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு. இவரது மகள் சுபாஷினி (வயது 13). இவர் செய்யாறில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் 27.8.2014 அன்று பள்ளிக்குச் செல்வதற்காக கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ்சில் ஏற முயன்றார். அப்போது பஸ்சில் சிக்கி சுபாஷினி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
விபத்தில் இறந்த சுபாஷினிக்கு நஷ்டஈடு தொகை வழங்கக் கோரி அவரது பெற்றோர் சார்பில் செய்யாறு சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த சார்பு நீதிபதி விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு நஷ்டஈடாக ரூ.8¾ லட்சத்தை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் மண்டலம் வழங்க வேண்டும் என்று கடந்த 16.10.2019 அன்று உத்தரவிட்டார்.
அரசு பஸ் ஜப்தி
2 வருடங்களுக்கு மேலாகியும் நஷ்டஈடு வழங்காததால் சுபாஷினியின் பெற்றோர் செய்யாறு சார்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
அந்த மனுவின் பேரில் விசாரணை மேற்கொண்ட சார்பு நீதிபதி குமரவர்மன், நஷ்டஈடு தொகையை அசலும், வட்டியுமாக சேர்த்து ரூ.14.35 லட்சத்தை போக்குவரத்துக் கழகம் செலுத்த வேண்டும் என்றும், தவறினால் அரசு பஸ் ஜப்தி செய்யப்படும் என்று கடந்த 29.8.2022 அன்று உத்தரவிட்டு இருந்தார்.
அந்த உத்தரவின் பேரில் 2.9.2022 செய்யாறிலிருந்து காஞ்சீபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
உடனே போக்குவரத்து கழகம் சார்பில் விபத்தில் இறந்த மாணவியின் பெற்றோரிடம் நீதிமன்றம் உத்தரவிட்ட நஷ்டஈடு தொகையில் ரூ.13.64 லட்சத்தை செலுத்தி விட்டு பஸ்சை மீட்டுச் சென்றனர்.
மீதி தொகையான ரூ.72 ஆயிரத்தை மனுதாரருக்கு போக்குவரத்துக் கழகம் வழங்காத காரணத்தால், 2-வது முறையாக செய்யாறு பஸ் நிலையத்தில் சேலம் செல்ல இருந்த அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து செய்யாறு சார்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.