இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
விபத்தில் கல்லூரி மாணவி காயம் அடைந்த வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
வேடசந்தூர் அருகே உள்ள நத்தப்பட்டி ஊராட்சி குஞ்சுவீரன்பட்டியை சேர்ந்தவர் மூர்த்தி. அவருடைய மகள் அகல்யா. கடந்த 18.9.2014-ந்தேதி இவர், கல்லூரிக்கு சென்று விட்டு மீண்டும் தனது ஊருக்கு செல்வதற்காக வேடசந்தூர் பஸ் நிலையத்தில் இருந்து ஆர்.கோம்பை செல்லும் அரசு பஸ்சில் பயணம் செய்தார். வேடசந்துர் அருகே கன்னிமார்புரம் என்ற இடத்தில் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பஸ்சில் இருந்து கீழே விழுந்து அகல்யா படுகாயம் அடைந்தார். தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் குணம் அடைந்தார்.
இந்தநிலையில் தனக்கு இழப்பீடு கேட்டு வேடசந்தூர் கோர்ட்டில் அகல்யா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், அகல்யாவுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசு போக்குவரத்து கழகத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இழப்பீடு எதுவும் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து அகல்யா தரப்பில், வேடசந்தூர் சப்-கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சரவணக்குமார், அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து பழனி செல்வதற்காக நேற்று காலை வேடசந்தூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசு பஸ்சை, கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து வேடசந்தூர் கோர்ட்டில் நிறுத்தினர்.