வருங்காலத் தலைமுறையினரின் நலன்கருதி அரசு அனைத்து மதுக்கடைகளையும் மூடவேண்டும்: அன்புமணி ராமதாஸ்


வருங்காலத் தலைமுறையினரின் நலன்கருதி அரசு அனைத்து மதுக்கடைகளையும் மூடவேண்டும்: அன்புமணி ராமதாஸ்
x

மதுக்கடைகளை மூடுவதன் மூலமாக மட்டுமே சீரழிந்து வரும் மாணவர் சமுதாயத்தை மீட்டெடுக்க முடியும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் கொடுமைக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும்; இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சாட்டையை சுழற்றியிருப்பது வரவேற்கத்தக்கது.

21 வயதுக்கும் குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்வது சட்டப்படியே தடை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடையை செம்மையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கு விசாரணையின்போது, 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்ற விதியை அரசு மிகத் தீவிரமாக செயல்படுத்தும்.

இதற்கான அறிவிப்பு பலகை அனைத்து மதுக்கடைகளிலும் அமைக்கப்படும். தேவைப்பட்டால் மது வாங்க வருபவர்களின் வயதை சரி பார்க்க பிறப்புச் சான்றிதழ் கூட கோரப்படும் என்று தமிழக அரசு உறுதியளித்தது. ஆனால், இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு முயற்சி கூட மேற்கொள்ளவில்லை.

மது கலாச்சாரம் மற்றவர்களை எவ்வாறு பாதித்திருக்கிறதோ, அதே அளவுக்கு மாணவச் செல்வங்களையும் பாதித்திருக்கிறது. பள்ளிகளுக்கு அருகிலும், பள்ளி செல்லும் சாலைகளிலும் மதுக்கடைகளை திறந்து வைத்துக்கொண்டு, 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மது விற்கக்கூடாது என்று ஆணையிடுவதன் மூலமாக மட்டுமே மாணவர்களை மதுவின் பிடியிலிருந்து மீட்க முடியாது.

மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவதன் மூலமாக மட்டுமே சீரழிந்து வரும் மாணவர் சமுதாயத்தை மீட்டெடுத்து சீரமைக்க முடியும். எனவே, வருங்காலத் தலைமுறையினரின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளையும் மூட அரசு ஆணையிட வேண்டும். அதன் மூலம், மாணவச் செல்வங்கள் மதுவுக்கு அடிமையாகாமல் கல்வியில் சிறக்கவும், சாதிக்கவும் தமிழ்நாடு அரசு துணை நிற்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story