போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் பட்டதாரி வாலிபர் கைது


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் பட்டதாரி வாலிபர் கைது
x

வாகன சோதனையின்போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை

சென்னை.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை சட்டம்-ஒழுங்கு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணி செய்பவர் கார்த்திகேயன் (வயது 54). இவர் நேற்று முன்தினம் இரவு, தாராபூர் டவர் அருகே, டேம்ஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் தடுமாறி மோட்டார் சைக்கிளோடு கீழே சாய்ந்தார். ஓடிச்சென்று அவரை தூக்கி விட்டார் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன்.

அளவுக்கு அதிகமான குடிபோதையில் இருந்ததால், குறிப்பிட்ட வாலிபர், மோட்டார் சைக்கிளோடு கீழே சாய்ந்தது தெரிய வந்தது. அவர் மீது போதை வழக்கு போட்டு, அவரது மோட்டார் சைக்கிளை வைத்துக்கொண்டு, நாளைக்கு வாருங்கள் என்று அனுப்பி வைத்தார். ஆனால் அந்த வாலிபர், போக மறுத்து தனது மோட்டார் சைக்கிளை திருப்பி கொடுத்தால்தான் போவேன் என்று அடம்பிடித்தார்.

பின்னர் திடீரென்று சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயனை சரமாரியாக போதை வாலிபர் தாக்கினார். உடன் இருந்த போலீஸ்காரர் சிவகுருநாதன் தடுத்தார். அவரும் தாக்கப்பட்டார். ஒரு வழியாக போதை வாலிபரை சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவர் மீது 3 சட்டபிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் மார்க் (23). சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த அவர் பட்டப்படிப்பு முடித்துள்ளார். அவர் வேலை இல்லாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தாக்கியதில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் காயம் அடைந்தார். இதற்காக ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.


Next Story