பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா தாமதம்: கவர்னர் மாளிகை விளக்கம்


பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா தாமதம்: கவர்னர் மாளிகை விளக்கம்
x
தினத்தந்தி 9 Jun 2023 5:40 AM GMT (Updated: 9 Jun 2023 5:45 AM GMT)

பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா தாமதத்திற்கு கவர்னர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்த ஏற்படும் காலதாமதத்திற்கு கவர்னரே காரணம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியிருந்தார். பல்கலை. பட்டமளிப்பு விழாக்களுக்கு சிறப்பு விருந்தினராக ஒன்றிய அமைச்சர்களை அழைத்து வர வேண்டும் என கவர்னர் விரும்புகிறார் என்றும்,. தமிழ்நாட்டில் உள்ள தமிழறிஞர்கள், முன்னாள் துணைவேந்தர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைக்க கவர்னர் விரும்புவதில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், பட்டமளிப்பு விவகாரம் தொடர்பாக கவர்னர் மாளிகை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டு உள்ளது. அதில், ''தமிழ்நாட்டில் இதுவரை 7 பல்கலைக்கழகங்களில் மட்டுமே பட்டமளிப்பு விழா நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளது.

இதில் சென்னை பல்கலை. (ஜூன் 16), வேலூர் திருவள்ளுவர் பல்கலை. (ஜூன் 19), பெரியார் பல்கலை. (ஜூன் 29), மீன்வளப் பல்கலை. (ஜூலை 7) தேதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து திருச்சி பாரதிதாசன் பல்கலை., நெல்லை மனோன்மணீயம் பல்கலை., கோவை வேளாண் பல்கலை. ஆகியவற்றில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பட்டமளிப்பு விழா நடத்தப்படும்.

இதில் திருச்சி பாரதிதாசன் பல்கலை.யில் மட்டுமே கொரோனா பரவலால் 3 ஆண்டுகளுக்கு சேர்த்து மாணவர்களுக்கு தற்போது பட்டச் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. கோவை பாரதியார் பல்கலை.யில் இதுவரை துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. துணைவேந்தர் நியமிக்கப்பட்டு இருந்தால், அங்கு பட்டமளிப்பு விழாவை நடத்த அனுமதித் திருப்போம். தமிழ்நாடு அரசு சார்பில் அதற்காக தேடுதல் குழு அமைக்கப்படவில்லை. இதற்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.


Next Story