கிராமசபை கூட்டம்


கிராமசபை கூட்டம்
x

பெண்கள் கல்வியை பாதியில் நிறுத்தக்கூடாது என்று, கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் லலிதா கூறினார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் கிராமத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் வினோஷா கருணாகரன் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் சந்தோஷ்குமார் வரவேற்றார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், மாவட்ட தணிக்கை அலுவலர் மஞ்சுளா, வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி பற்றாளராக கலந்து கொண்டார்.

பெண்களுக்கான திட்டங்கள்

கூட்டத்தில் கலெக்டர் லலிதா கலந்து கொண்டு பேசியதாவது:-

எக்காரணத்தை கொண்டும் பெண்கள் படிப்பை பாதியில் நிறுத்தக்கூடாது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள உயர் அதிகாரிகளுள் பெரும்பாலானோர் பெண்களாகவே உள்ளனர். இதற்கு பெண்கள் நன்றாக படித்தது தான் காரணம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்காக பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.இதனை பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் வரும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தீவிர நடவடிக்கை எடுப்பது. மழைநீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து தடையின்றி மழை நீர் செல்ல நடவடிக்கை எடுப்பது, புயல் வெள்ள பாதுகாப்பு மையங்களை சுத்தம் செய்து தயார் நிலையில் வைத்திருப்பது. அதில் குடிநீர் கழிவறை உள்ளிட்ட வசதிகளை சரியாக வைத்திருக்க வேண்டும். வாய்க்கால்களில் தடையின்றி மழை நீர் செல்லும் வகையில் அடைப்புகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வேளாண் உதவி இயக்குனர் எழில்ராஜா, ஒன்றியக்குழு உறுப்பினர் செல்வி செல்வம், கால்நடை மருத்துவ அலுவலர் எஸ்வந்த்ராவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி துணைத் தலைவர் தையல்நாயகி நன்றி கூறினார்.




Next Story