ஜி.எஸ்.டி.யை ஒரே சீரான குறைந்த வரியாக அமல்படுத்த வேண்டும்


ஜி.எஸ்.டி.யை ஒரே சீரான குறைந்த வரியாக அமல்படுத்த வேண்டும்
x

ஜி.எஸ்.டி.யை ஒரே சீரான குறைந்த வரியாக அமல்படுத்த வேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறினாா்.

திருவண்ணாமலை

ஜி.எஸ்.டி.யை ஒரே சீரான குறைந்த வரியாக அமல்படுத்த வேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறினாா்.

பொதுக்குழு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பொதுக்குழு கூட்டம் செய்யாறில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. செய்யாறு நகர அனைத்து வணிகர் சங்கங்களின் தலைவர் தெய்வசிகாமணி தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பங்கேற்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் புதிய கொடியினை அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியை ஒரே சீரான குறைந்த வரியாக அமல்படுத்திட வேண்டும். செஸ்வரியை ரத்து செய்ய வேண்டும். வணிகர்களின் நலனை பேணிக் காக்கும் அரசாக செயல்பட வேண்டும்.

உலகில் எந்த நாட்டிலும் 22 சதவீதத்துக்கு மேல் வரி உயர்வு இல்லை. ஆனால், இந்தியாவில் மட்டும் 28 சதவீதம் வரி உயர்வு அமல்படுத்தப்படுகிறது. இதை மேலும் அதிகரிக்கவே முனைப்பு காட்டி வருகிறார்கள். பிரதமர் ஒரு லட்சம் கோடி வரி வசூல் நடந்தால் வரிகளை ரத்து செய்வோம் எனக் கூறியும், ஒரு லட்சத்து 66 ஆயிரம் கோடி வரி வசூல் செய்தும் ஜி.எஸ்.டி.யை குறைக்காமல் உள்ளார்.

வணிகர்களின் கொடியை கிராமங்கள் முதல் நகர பகுதிகளில் ஏற்றி வைக்க வேண்டும். மே.5 வணிகர் தினத்தன்று வணிகர்கள் அனைத்து கடைகளையும் மூடிவிட்டு வணிகர் மாநாட்டில் பங்கேற்க வேண்டும். அப்போது தான் வணிகர்கள் கூட்டத்தினை பார்த்து அரசாங்கம் செவி சாய்க்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆன்லைன் வர்த்தகம்

கூட்டத்தில் தமிழகத்தில் பெரிய மாவட்டமாக உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரித்து செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அமைக்க வேண்டும்.

செய்யாறில் மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அமைக்க வேண்டும்.

ஆற்காடு-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்கம் செய்ய ஆய்வு செய்து நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட திட்டப்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். செய்யாறு-காஞ்சீபுரம் சாலையை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்த வேண்டும். செய்யாறு வழியாக தென்மாவட்ட பகுதிகளுக்கு தொலைதூர பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்.

மருந்துகளை போதைப் பொருளாக பயன்படுத்த காரணமாக உள்ள ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகரி-திண்டிவனம் ெரயில் பாதை திட்டப் பணியினை விரைவுப்படுத்த வேண்டும். செய்யாறு மார்க்கெட் பகுதியில் நகராட்சி வணிக வளாக கட்டுமான பணியை விரைந்து முடித்திட வேண்டும்.

செய்யாறு மார்க்கெட் பகுதி வணிக வளாகத்தில் ஏற்கனவே இருந்து வியாபாரம் செய்த வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளித்து திருவத்திபுரம் நகராட்சி நிர்வாகம் கடைகளை ஒதுக்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டன.


Next Story