6 இலக்க எண்களுடன் 'ஹால் மார்க்' கட்டாயம்:தங்க நகை வாங்கும்போது குழப்பமா? நம்பிக்கையா?-விற்பனையாளர், வாடிக்கையாளர்கள் கருத்து
6 இலக்க எண்களுடன் 'ஹால் மார்க்' கட்டாயம் என்ற நடைமுறையால், தங்க நகை வாங்கும்போது குழப்பமா? நம்பிக்கையா? என்பது குறித:து விற்பனையாளர், வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பொருட்களின் தரத்தை கண்காணிக்க 1947-ம் ஆண்டு இந்திய தரநிர்ணய அமைப்பு (ஐ.எஸ்.ஐ.) உருவாக்கப்பட்டது. பெருகிவரும் வளர்ச்சிக்கு ஏற்ப இந்த அமைப்புக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் 1986-ம் ஆண்டு இந்திய தரநிர்ணய அமைவனச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அது 1987-ல் இந்திய தரநிர்ணய அமைப்பாக (பி.ஐ.எஸ்.) மாற்றம் செய்யப்பட்டது.
நோக்கம்
பொருட்களின் தரத்தை தேசிய அளவில் நிர்ணயம் செய்து தரச் சான்றிதழ் வழங்குவதுடன் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவது, சர்வதேச அளவில் இந்திய பொருட்களின் தரத்திற்கு உத்திரவாதம் அளித்து பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு உறுதுணையாக இருப்பது போன்றவைதான் அதன் நோக்கம்.
இவ்வாறு பல்வேறு உலோக பொருட்கள், உணவு பொருட்களுக்கு எல்லாம் தரநிர்ணயம் செய்யப்பட்ட போதிலும் தங்கத்திற்கு மட்டும் தரநிர்ணயம் செய்ய போதுமான வழிமுறைகள் செய்யப்படாமல் இருந்து வந்தது.
சேதார இழப்பு
தங்கத்தை பொறுத்த அளவில் 24 கேரட் சுத்த தங்கத்தை நேரடியாக அணிகலன்களாக செய்ய முடியாது. அதனுடன் செம்பு மற்றும் வெள்ளி போன்ற பிற உலோகங்களை கலந்து 22 கேரட் அளவிற்கு தங்கத்தை மாற்றம் செய்த பிறகே அதனை வளைத்து நெளித்து மக்கள் விரும்பும் வகையிலான அணிகலன்களை செய்ய முடியும்.
இதனை பயன்படுத்தி தங்கத்தை வாங்கும் மக்களிடம் செய்கூலி, சேதாரம் என கூடுதலான பணத்தை பெற்ற போதிலும், விற்பனை செய்யும் வியாபாரிக்கு வியாபாரி தங்கத்தின் தரம் வேறுபட்டே காணப்பட்டு வந்தது. உதாரணமாக ஒரு வியாபாரியிடம் வாங்கிய தங்க நகையை கொஞ்சநாள் கழித்து விற்பனை செய்கிறோம். அதற்கு பதிலாக புதிய நகைகளை வாங்குகிறோம். அப்போது அவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? நாம் கொடுத்த நகையில் அதிக அளவில் சேதாரத்தை கழித்து தங்கத்தின் மதிப்பை குறைத்துக் கூறி கூடுதலாக பணத்தை பெற்றுக் கொண்ட பின்னரே புதிய தங்க நகைகளை தருகிறார்கள்.
ஹால்மார்க் முத்திரை
இதுபோன்ற பிரச்சினைகளை களைய இந்திய தரநிர்ணய அமைப்பு சார்பில் கடந்த 2000 ஆண்டு முதல் 'பி.ஐ.எஸ். ஹால்மார்க்' என்ற பெயரில் ஹால்மார்க் நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இதனால், தங்க நகை உற்பத்தியாளர்கள் உருவாக்கும் ஆபரணங்களை இந்திய தரநிர்ணய மையங்களில் காண்பித்து அவற்றின் தரத்தை சோதனை செய்து, ஹால்மார்க் முத்திரையை பெற்று விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இத்தகைய ஹால்மார்க் முத்திரை பெறப்பட்ட நகைகளை மக்கள் மறுவிற்பனை செய்து புதிய வடிவத்தில் நகைகளை பெறும் போது பெரும் அளவில் சேதாரம் கழிக்கப்படாமல் மக்களின் பணம் மிச்சப்படுத்தப்பட்டது.
இவ்வாறு ஹால்மார்க் முத்திரையிடப்படும் நகைகளில் 4 அடையாளங்கள் இடப்பட்டு வந்தன. அதில் முதல் அடையாளம் இந்திய தரநிர்ணய அமைப்பு குறியீடு, 2-வது அடையாளம் தங்கத்தின் தூய்மையை குறிக்கும். 3-வது அடையாளம் ஹால்மார்க்கிங் மையத்தையும், 4-வது அடையாளம் தங்க நகையை விற்பனை செய்யும் கடையையும் குறிக்கும்.
தனித்த அடையாள எண்
இந்த நிலையில், ஏப்ரல் 1-ந் தேதி (நேற்று) முதல் 6 இலக்க தனித்த அடையாள எண்ணுடன் (எச்.யூ.ஐ.டி.) ஹால்மார்க் முத்திரை பெறப்பட்ட நகைகளை மட்டுமே கடைகளில் விற்பனை செய்ய முடியும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. புதிய முறையில் வழங்கப்படும் ஹால்மார்க் முத்திரையில் 3 அடையாளங்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. முதல் 2 அடையாளங்கள் ஹால்மார்க் முத்திரை வழங்கிய மையத்தையும், நகையை தயாரித்த கடையையும் குறிக்கும். 3-வது அடையாளமானது 6 இலக்க தனித்த அடையாள எண் (எச்.யூ.ஐ.டி.) ஆகும்.
இந்த 6 இலக்க தனித்த அடையாள எண்ணை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ள 'பிஸ் கேர்' (BIS CARE) செயலியில் சோதனை செய்து பார்க்கும்போது தங்க நகையின் மொத்த தகவலும் தெரிந்துவிடும். அதாவது நகை கடையின் பெயர், முகவரி, ஹால்மார்க் முத்திரை வழங்கிய மையத்தின் பெயர், நகை கடையின் பதிவு எண், ஹால்மார்க் முத்திரை வழங்கிய மைய அங்கீகார எண், எந்த தேதியில் ஹால்மார்க் முத்திரை வழங்கப்பட்டது. ஆபரணத்தின் பெயர் (மோதிரம், கம்மல், செயின்), முக்கியமாக நகையின் தூய்மை மற்றும் கேரட் அளவு உள்ளிட்ட அனைத்து தகவல்களும் தெரிந்துவிடும்.
இதன் மூலம் பொதுமக்கள் இனி வாங்க போகும் நகையின் துய்மை, தரம் உள்ளிட்ட விவரங்களை நகையை வாங்கும் முன்பே 'பிஸ் கேர்' செயலி மூலம் தெரிந்து கொண்டு நகைகளை வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அறிமுகமாகி இருக்கும் 6 இலக்க தனித்த அடையாள எண்ணுடன் (எச்.யூ.ஐ.டி.) கூடிய ஹால் மார்க் முத்திரை பொதுமக்களுக்கோ, வியாபாரிகளுக்கோ குழப்பத்தை ஏற்படுத்துகிறதா? அல்லது நம்பிக்கை தருகிறதா? என்பது குறித்து சேலத்தை சேர்ந்த பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை பார்ப்போம்.
வரவேற்கத்தக்கது
சேலத்தில் பிரபல நகைக்கடையான வி.எஸ்.செல்வமாளிகை ஜூவல்லர்ஸ் உரிமையாளர் செல்வமாளிகை மாணிக்கம்:-
தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்பது வரவேற்கத்தக்கது. எப்ரல் 1-ந் தேதி முதல் ஏற்கனவே பெறப்பட்ட ஹால் மார்க் முத்திரைகளுக்கு மாற்றாக 'ஹால்மார்க் யூனிக் ஐடெண்டிட்டி' (எச்.யூ.ஐ.டி.) என்ற 6 இலக்க தனித்த அடையாள எண்ணுடன் கூடிய ஹால் மார்க் முத்திரை பெற்றுதான் நகைகளை விற்பனை செய்ய முடியும். இதனால் இனி எந்த வியாபாரியும் மக்களை ஏமாற்ற முடியாது. நாங்கள் 100 சதவீதம் ஹால்மார்க் முத்திரையுடன் தான் நகைகளை விற்பனை செய்து வருகிறோம். வாடிக்கையாளர்கள் நகையை வாங்கும் முன்பே 'ஹால்மார்க் யூனிக் ஐடெண்டிட்டி' எண்ணை இணையதளத்தின் மூலம் பரிசோதித்து நகையின் தரம் மற்றும் எடையை துல்லியமாக அறிந்து கொண்ட பின்னர் வாங்கலாம்.
இந்த புதிய ஹால்மார்க் முத்திரையால் பெரிய கார்ப்பரேட் நகைக்கடைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஜி.எஸ்.டி. இல்லாமல் தரம் குறைந்த, அளவு குறைந்த நகைகளை யாரும் விற்பனை செய்ய முடியாது. மொத்தத்தில் இது பொதுமக்களுக்கு சிறப்பான வரவேற்கக்கூடிய ஒரு விஷயம்தான். தமிழகத்தில் மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில் முதற்கட்டமாக 26 மாவட்டங்களில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, ஹால்மார்க் மையத்தை அதிகரிப்படுத்த வேண்டும்.
தங்கத்தின் தூய்மை உறுதி
நாகியம்பட்டியை சேர்ந்த ஆசிரியை லூசியா:-
ஹால்மார்க் முத்திரையுடன் கூடிய நகைகளை விற்பனை செய்வது தூய்மையான தங்கத்தை வாடிக்கையாளர்கள் வாங்க உதவி செய்கிறது. இது நகைகள் மீது முழு நம்பிக்கையை அளிக்கிறது. இந்த நடவடிக்கையால் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை மக்களை ஏமாற்றுவதில் இருந்து நிச்சயம் தடுக்கும். சில நகை உற்பத்தியாளர்கள் தங்க நகைகள் செய்யும் பொழுது கலப்படத்துடன் செய்கின்றனர். இதனால் தங்கத்தின் தூய்மை கெடுவதோடு அந்த நகைகளை படிக்காத, ஏழை, பாமர மக்கள் வாங்கி ஏமாற்றம் பெறுவர்.
இந்த ஹால்மார்க் முத்திரை விற்பனை அதை தடுக்கும். தங்கத்தின் தூய்மை பல்வேறு நகரங்களிலும் கடைக்கு கடை மாறுபடும். ஆனால் இனிமேல் அனைத்து கடைகளிலும் தங்கத்தின் தூய்மை உறுதி செய்யப்படும். தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டாலும் அதன் மீது கொண்ட ஆசை என்றும் குறைவதில்லை. அப்படிப்பட்ட ஆசையால் ஏதாவது ஒரு கடைக்கு சென்று தூய்மையற்ற தங்கத்தை வாங்காமல் தூய்மையான தங்கத்தை வாங்க இதன் மூலம் அரசு உதவி செய்துள்ளது.
கண்காணிக்க வேண்டும்
அரசிராமணி குள்ளம்பட்டியை சேர்ந்த கலைவாணி:- ஒரு காலத்தில் நகைக்கடையினரின் மீது கொண்ட நம்பிக்கையில்தான் நகைகளை வாங்கி வந்தோம். ஆனால் புதிய ஹால்மார்க் முத்திரை அறிவிப்பு மிகவும் வரவேற்கக்கூடிய ஒரு விஷயம். இதன்மூலம் நாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து குழந்தைகளுக்கு வாங்கும் நகைகளின் தரம் மற்றும் எடை உள்ளிட்ட விவரங்களை முன்கூட்டியே தெரிந்து கொண்டு வாங்க முடியும். இதனை வரவேற்கிறோம். அதேசமயம் போலி நகைகள் விற்பனை செய்து மக்களை ஏமாற்றும் செயல் முற்றிலும் தடுக்கப்படும். மேலும், தங்க நகைகளுக்கு ஹால்மார்க் கட்டாயம் என்று நடைமுறைப்படுத்தினால் மட்டும் போதாது? அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நகைக்கடைகளுக்கு சென்று கண்காணிக்க வேண்டும்.
நகைக்கடன்
சேலத்தை சேர்ந்த தங்க நகை மதிப்பீட்டாளர் செல்வம்:- தங்க நகைகளுக்கு பி.ஐ.எஸ் எனும் ஹால் மார்க் முத்திரை தற்போதைய காலத்திற்கு தங்க நகை ஆபரணங்கள் வாங்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு அவசியம். பிற்காலத்தில் நகைகளை விற்பனை செய்யும் போதும் அல்லது நகைகளை எக்ஸ்சேஞ்ச் செய்யும் பொழுதும் வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதம் இருக்கும். வங்கியில் வாடிக்கையாளர்கள் நகைகளை அடமானம் வைக்கும்பொழுது அது எந்த மாதிரியான நகை? அது ஹால்மார்க் முத்திரை உள்ளதா? என்பதை முதலில் பார்ப்போம். அதற்கு ஏற்றமாதிரி தான் நகைக்கடன் வழங்கப்படும். புதிய ஹால்மார்க் முத்திரை அறிவிப்பு மிகவும் வரவேற்கக்கூடிய ஒரு விஷயம். நடைமுறையில் சில தொந்தரவுகள் இருந்தாலும் நகைக்கடை உரிமையாளர்களுக்கும், தங்க நகை செய்யும் ஆசாரிகளுக்கும் மிகச்சிறந்த வரவேற்க வேண்டிய தேவை இருக்கிறது.
ஏமாற்ற முடியாது
சேலம் மணக்காடு பகுதியை சேர்ந்த கலாராணி:- புதிய ஹால்மார்க் முத்திரை அறிவிப்பு மிகவும் வரவேற்கக்கூடிய ஒரு விஷயம். எவ்வளவோ மக்கள் தங்கள் இருப்பிடங்களின் அருகில் சிறிய கடைகளில் சிறிய அளவில் நகைகளை வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இத்தகைய சிறிய கடைகளில் நகை வாங்க செல்லும் போது, ஒரு கூல்டிரிங் மற்றும் ஒரு கைப்பையை கொடுத்துவிட்டு 50 ரூபாய் விலையை குறைத்துக் கூறி தரமற்ற நகைகளை விற்பனை செய்பவர்களும் உண்டு. ஆனால், இனிமேல் இதுபோன்று யாரையும் ஏமாற்ற முடியாது. 22 காரட் தரம் கொண்ட நகைக்கு பதில் 18 காரட் தரம் கொண்ட நகையை இனி யாரும் விற்பனை செய்ய முடியாது. மக்களை ஏமாற்ற முடியாது. எனவே, புதிய ஹால்மார்க் முத்திரை முறையை நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.