மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Oct 2023 3:30 AM IST (Updated: 11 Oct 2023 3:30 AM IST)
t-max-icont-min-icon

100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு முறையாக ஊதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சீலப்பாடி, வெள்ளோடு, செட்டிநாயக்கன்பட்டி, தோட்டனூத்து உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.

சாணார்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு சங்கத்தின் ஒன்றிய செயலாளர் கருப்புசாமி தலைமை தாங்கினார். இதில், சாணார்பட்டி ஒன்றிய தலைவர் முருகன், பொருளாளர் பழனியம்மாள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு, 100 நாள் வேலைதிட்டத்தில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊதியம் வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் சாணார்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்கலாவதியிடம் தங்களது கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

பழனி, பட்டிவீரன்பட்டி

பழனி தாலுகா அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயந்தி தலைமையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில், மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பின்னர் அவர்கள், பழனி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாமில் கலந்துகொண்டு, 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு ஊதியம் முறையாக வழங்கக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணனிடம் முறையிட்டனர். பின்னர் தங்களது கோரிக்கை தொடர்பாகவும், புதிய அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்டவை கேட்டும் மனு கொடுத்தனர்.

இதேபோல் பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு தபால் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு சங்கத்தின் ஆத்தூர் ஒன்றிய தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். இதில், ஒன்றிய செயலாளர் மலைச்சாமி, சித்தரேவு தெற்கு கிளை செயலாளர் நாச்சிமுத்து உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story