ரவுடிகளை கண்காணிக்க போகும் 'பருந்து' - 5 புதிய திட்டங்களை செயல்படுத்த போலீசார் நடவடிக்கை


ரவுடிகளை கண்காணிக்க போகும் பருந்து - 5 புதிய திட்டங்களை செயல்படுத்த போலீசார் நடவடிக்கை
x

சென்னையில் ரவுடிகளை கண்காணிக்கும் வகையில் ‘பருந்து’ என்ற பெயரில் போலீசார் செயலியை உருவாக்க உள்ளனர்.

சென்னை

சென்னை மாநகரின் வளர்ச்சிக்கு ஏற்ப போலீஸ்துறையும் நவீனமயமாகி வருகிறது. குற்றங்களை குறைப்பதற்கும், சாலை விபத்துகளை தடுப்பதற்கும், குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்காகவும் போலீசார் நவீன தொழில்நுட்பங்கள் அடிப்படையில் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை போலீஸ்துறை சார்பில் 5 புதிய திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன. இந்த திட்டங்கள் குறித்து சென்னையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் முன்னிலையில் கூடுதல் கமிஷனர் லோகநாதன் நேற்று நிருபர்களிடம் விளக்கி கூறியதாவது:-

* இந்தியாவிலே முதன்முறையாக சென்னை அடையார் பெசன்ட் அவென்யூவில் டிரோன் போலீஸ் அலகு தொடங்கப்பட உள்ளது. விரைவு நடவடிக்கை கண்காணிப்பு டிரோன்கள்-6, 'ஹெவி லிப்ட் மல்டிரோட்டர்' டிரோன்-1, 'நீண்ட தூர ஆய்வு பிரிவு' டிரோன்-2 என மொத்தம் 9 டிரோன்கள் செயற்கை நுண்ணறிவு திறன்களுடன் பயன்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் திருவிழாக்கள், பொதுக்கூட்டங்கள் கண்காணிக்கப்படும்.

இந்த டிரோன்களில் ஏ.என்.பி.ஆர். கேமராக்கள் பொருத்தப்படும். இதில் பழைய குற்றவாளிகள் படம் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். எனவே அவர்கள் கூட்டத்தில் புகுந்தால் இந்த கேமரா காட்டி கொடுத்து விடும்.

கடல் அலைகளில் சிக்கியவர்களை இரவில் அடையாளம் காணும் பணியையும் இந்த டிரோன் மேற்கொள்ளும்.

* சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 12 ஆயிரத்து 835 இணைய வழி குற்ற சம்பவங்கள் தொடர்பாக புகார்கள் பெறப்படுகின்றன. அனைத்து புகார்களும் முறையாக பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டாலும் மோசடி செய்பவர்களின் தரவுகளை ஒப்பிடுவது மிகவும் கடினமானதாக இருக்கிறது.

எனவே இணையவழி குற்ற எச்சரிக்கை செயலி உருவாக்கப்பட உள்ளது. இதற்கு தமிழக அரசு ரூ.29 லட்சத்து 97 ஆயிரத்து 200 ஒப்புதல் அளித்துள்ளது. தொலைபேசி எண்கள், வங்கி கணக்குகள், யு.பி.ஐ. ஐ.டி.கள், சமூக ஊடக கணக்குகள், மின்னஞ்சல் ஐ.டி.கள், வாலட் ஐ.டி.கள் மற்றும் இணைதள யு.ஆர்.எல்.கள் போன்ற மோசடி செய்பவர்களின் விவரங்கள் தரவுத்தளத்தில் உள்ளிடப்பட்டு குற்ற சாட்டப்பட்டவர்களின் செயல் முறை பதிவு அடிப்படையில் பட்டியலிட்டு தக்க நடவடிக்கை எடுப்பதற்கு இந்த செயலி உதவும்.

* போலீஸ் அதிகாரிகள், போலீசார் எதிர்கொள்ளும் சிரமங்களை சமாளிக்க சரித்திர பதிவேடு குற்றவாளிகள், ரவுடிகளின் பதிவை புதுப்பிப்பதில் 'பருந்து' என்ற பெயரில் செயலியை உருவாக்கி அதை டிஜிட்டல் மயமாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலில் குற்றவாளிகள் மீது உள்ள வழக்குகள், சிறை தண்டனை போன்ற அனைத்து விவரங்களும் பதிவேற்றம் செய்யப்படும். இதன் மூலம் குற்றவாளிகளின் பின்னணி வரலாறு தரவுகள் போலீசாருக்கு உடனடியாக கிடைக்கும். இந்த செயலி போலீஸ் அதிகாரிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இந்த செயலியை உருவாக்குவதற்கு ரூ.32 லட்சத்து 60 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

* திருட்டு வாகனங்கள் மூலமாக சங்கிலி பறிப்பு, வழிபறி சம்பவங்கள், சமூக விரோத செயல்கள் அரங்கேறுகின்றன. எனவே திருட்டு வாகனங்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் ஒருங்கிணைந்த வாகன கண்காணிப்பு அமைப்பு செயலி ரூ.1 கோடியே 81 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் திருட்டு வாகன எண் விவரங்கள் ஏ.என்.பி.ஆர். கேமராக்களில் இணைக்கப்பட்டு சிக்னலில் பொருத்தப்படும். திருட்டு வாகனங்கள் சிக்னலை கடந்து சென்றால் இந்த செயலிக்கு உடனடியாக தகவல் வரும். அதனடிப்படையில் திருட்டு வாகனங்கள் மீட்கப்படும்.

* சென்னையில் ஆண்டுக்கு 6.51 சதவீதம் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 312 போக்குவரத்து சிக்னல்களை சுற்றி போக்குவரத்து நெரிசலை நிகழ் நேரத்தில் கண்காணிப்பது கடினமான வேலையாகிவிட்டது. எனவே போக்குவரத்து நெரிசலை கண்காணித்து அடையாளம் கண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு செல்போன் மூலம் தெரிவிப்பதற்காக ரூ.1 கோடியே 2 லட்சத்து 50 ஆயிரம் செலவில் நேரடி போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பு தொடங்கப்பட உள்ளது.

இதன் மூலம் போக்குவரத்து நெரிசலை முன்கூட்டியே கணித்து தக்க நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும்.

மேற்கண்ட புதிய திட்டங்கள் அமலுக்கு வர உள்ளது.

சாலையிலும், கடற்கரையிலும் ரோந்து பணியை மேற்கொள்வதற்காக ரூ.78 லட்சத்து 63 ஆயிரத்து 448 செலவில் 4 'பீச் பகி' வாகனங்கள் வாங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டங்கள் அறிவிப்பு நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் அன்பு, பிரேம் ஆனந்த் சின்ஹா, கபில்குமார் சி.ஷரத்கர், மகேஸ்வரி, இணை கமிஷனர்கள் சிபி சக்ரவர்த்தி, தீஷா மிட்டல், ரம்யா பாரதி, மனோகரன், மயில்வாகணன் உள்பட போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சென்னை உளவுப்பிரிவு துணை கமிஷனர் சக்திவேல், உதவி கமிஷனர்கள் விஜயராமுலு, ஜார்ஜ் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story