சாமி சிலைகளை சேதப்படுத்தியவர் கைது


சாமி சிலைகளை சேதப்படுத்தியவர் கைது
x

சாமி சிலைகளை சேதப்படுத்தியவர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர்

பாடாலூா்:

சிலைகளை சேதப்படுத்தினார்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளத்தில் மலையின் மீது பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் அமைந்துள்ள மலையின் அடிவாரத்தில், படிக்கட்டுகளில் ஏறும் பகுதியின் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனி சன்னதி கட்டப்பட்டு, அதில் முருகன், வள்ளி, தெய்வானைக்கு சுமார் 4 அடி உயரத்தில் சிமெண்டினால் செய்யப்பட்ட சிலைகள் வைக்கப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில் வள்ளி, தெய்வானை சிலைகளை நேற்று மதியம் 12.30 மணியளவில் ஆண் ஒருவர் கல்லால் அடித்து சேதப்படுத்திக் கொண்டிருந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த வழியாக சென்ற பக்தர்கள் ஓடிச்சென்று அந்த நபரை பிடித்து, சிலைகளை சேதப்படுத்துவதை தடுத்தனர்.

மாத்திரை வாங்குவதற்கு...

பின்னர் அவர்கள் இது குறித்து பாடாலூர் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த நபரை பக்தர்களிடம் இருந்து மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சிறுவயலூரை சேர்ந்த பூபதி (வயது 49) என்பதும், அவர் தனது மனைவி லட்சுமியுடன் திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, பெருமாள்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மாமனார் வீட்டில் கடந்த 12 ஆண்டுகளாக வசித்து வருவதும் தெரியவந்தது. மேலும் அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு, அதற்காக மாத்திரைகள் உட்ெகாண்டு வருவதாக கூறப்படுகிறது. நேற்று காலை வீட்டில் உள்ளவர்களிடம் மாத்திரை வாங்குவதற்கு துறையூர் சென்று வருவதாக கூறிவிட்டு வந்த அவர், செட்டிகுளத்துக்கு வந்து சுவாமி சிலைகளை சேதப்படுத்தியது, விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

போலீஸ் பாதுகாப்பு

மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவிலில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் இறுதியில் செட்டிகுளத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சுவாமி சிலைகள், சுவாமி வாகனங்களை உடைத்து சேதப்படுத்தி, ஆவணங்களை எரித்த மனநலம் பாதிக்கப்பட்ட மாவிலங்கையை சேர்ந்த செல்வராஜ் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story