அய்யம்பேட்டை பகுதியில் பலத்த மழை
அய்யம்பேட்டை பகுதியில் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அய்யம்பேட்டை:
அய்யம்பேட்டை பகுதியில் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சுட்டெரிக்கும் வெயில்
அய்யம்பேட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் காணப்பட்டது. பகலில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் இரவிலும் தென்பட்டது. இரவு நேரங்களில் மின்விசிறியில் இருந்து அனல் காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
அதேபோல மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் இப்பகுதி விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனர். ஆனால் பல்வேறு இடங்களில் உள்ள ஆறு, குளங்களுக்கு போதுமான அளவு தண்ணீர் வரவில்லை. இதனால் பயிர்களுக்கு தண்ணீர் இன்றி கவலையில் இருந்து வந்தனர்.
பலத்த மழை
இந்த நிலையில் அய்யம்பேட்டை பகுதியில் நேற்று காலையில் இருந்து வெயில் சுட்டெரித்து. பின்னர் மாலையில் கருமேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீசியது. இதை தொடர்ந்து இரவில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.
இதேபோல் மாகாளிபுரம், கணபதி அக்ரகாரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழை சம்பா சாகுபடிக்கு பயன் உள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
பொதுமக்கள் மகிழ்ச்சி
இந்த மழையால் வெப்பம் தணிந்ததால், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் படுகை பகுதிகளில் நடைபெற்று வரும் செங்கல் சூளை பணிகள் பாதிக்கப்பட்டன.