வீடு சூறை, மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிப்பு


வீடு சூறை, மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிப்பு
x

தக்கலை அருகே நள்ளிரவில் இருதரப்பினர் இ்டையே மோதல் நடந்தது. அப்போது வீடு சூறையாடப்பட்டு, மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதையொட்டி 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை அருகே நள்ளிரவில் இருதரப்பினர் இ்டையே மோதல் நடந்தது. அப்போது வீடு சூறையாடப்பட்டு, மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதையொட்டி 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

மோட்டார் சைக்கிள்கள் எரிப்பு

தக்கலை அருகே உள்ள காட்டாத்துறையில் வசிப்பவர் கணேஷ் (வயது 26) தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அனீஸ் (27) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கணேஷ், தனது நண்பர்கள் எட்வின் ராபர்ட் (32), சுரேஷ்பாபு (28) ஆகியோருடன் அனீஸ் வீட்டுக்கு சென்றதாகவும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களை பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு, டெம்போவின் முன்பக்க கண்ணாடியை உடைத்ததாகவும் கூறப்படுகிறது.

வாலிபர் மீது தாக்குதல்

வீட்டில் இருந்த அனீஸ் சத்தம் கேட்டு வெளியே வந்தார். அப்போது அவரையும் தாக்கியுள்ளனர். இந்த சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் வசிப்பவர்கள் ஓடி வந்தனர். அதை பார்த்ததும் 3 பேர் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.

இந்த தாக்குதல் சம்பவம் அனீசுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் பதில் தாக்குதலுக்கு அவரது உறவினர்களான சபீன் (25), சுஜின் (24) ஆகியோரை அழைத்து கொண்டு கணேஷ் வீட்டிற்கு சென்றதாகவும், அங்கு கணேஷ் இல்லாததால் வீட்டில் இருந்த டி.வி.யை வெட்டரிவாளால் வெட்டியும், புறாக்கூண்டை சேதப்படுத்தியும், வீட்டை சூறையாடியதாகவும் கூறப்படுகிறது.

3 பேர் கைது

ஒரே பகுதியில் இருதரப்பினரும் மோதிக்கொண்ட சம்பவம் நள்ளிரவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தக்கலை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது இருதரப்பினரும் வீட்டில் இல்லை.

இந்த மோதல் சம்பந்தமாக இருதரப்பை சேர்ந்த 6 பேர் மீதும் தனித்தனியாக வழக்குபதிவு செய்யப்பட்டது. பின்னர் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி கணேஷ், இன்னொரு தரப்பை சேர்ந்த அனீஷ், சபீன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். தலைமறைவான 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். நள்ளிரவில் இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story