ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். தேர்வுகளை 22 மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும்: சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆண்டுதோறும் குடிமைப் பணி தேர்வுகள் (சிவில் சர்வீஸ்) நடத்தப்பட்டு வருகின்றன.
சென்னை,
ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் குடிமைப் பணி தேர்வுகள் (சிவில் சர்வீஸ்) நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும். இதில் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்களை வைத்து இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.
இந்த சிவில் சர்வீசஸ் தேர்வுகளின் வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே வழங்கப்படும்.
இந்த நிலையில் 22 மாநில மொழிகளிலும் இந்த தேர்வுகளை நடத்த உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சேர்ந்த எஸ்.பாலமுருகன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
எஸ்.பாலமுருகன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்,
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான வினாத்தாள்களில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கேள்விகள் இடம்பெற்றுள்ளன. அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளிலும் இந்த தேர்வுகளை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி கங்கா புர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. பின்பு டிசம்பர் 6-ந்தேதிக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.