அதிமுக பெயர், கட்சி கொடியை இனி வேறு யாராவது பயன்படுத்தினால் வழக்கு தொடரப்படும் - பொள்ளாச்சி ஜெயராமன்


அதிமுக பெயர், கட்சி கொடியை இனி வேறு யாராவது பயன்படுத்தினால் வழக்கு தொடரப்படும் - பொள்ளாச்சி ஜெயராமன்
x

அதிமுக பெயர், கட்சி கொடியை இனி வேறு யாராவது பயன்படுத்தினால் வழக்கு தொடரப்படும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டு உள்ளது. மேலும் ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்து உள்ளது. கர்நாடகாவில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

தேர்தல் ஆணையம் அறிவிப்பை தொடர்ந்து அதிமுக எம்எல்ஏல்க்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். மேலும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் ஆணையம் உத்தரவு குறித்து அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

"அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுகொண்டதன் மூலம், ஓபிஎஸ் நீக்கம் செல்லும் என உறுதியாகியுள்ளது. அதிமுக என்றால் எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி பழனிசாமி என்றால் அதிமுக. இனிமேல் ஏறுமுகம்தான். இனி வெற்றி மேல் வெற்றிகள் எடப்பாடியாருக்கு குவியும். அதிமுக பெயர், கட்சி கொடியை இனி வேறு யாராவது பயன்படுத்தினால் வழக்கு தொடரப்படும். தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி அதிமுகவின் பெயர், சின்னம், கட்சியை யாரும் உரிமை கோரவோ, பயன்படுத்தவோ முடியாது" என்று கூறினார்.


Next Story