போக்குவரத்துக்கு இடையூறாக மண் ஏற்றி சென்ற லாரிகள் சிறைபிடிப்பு


போக்குவரத்துக்கு இடையூறாக மண் ஏற்றி சென்ற லாரிகள் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 6 July 2023 12:15 AM IST (Updated: 6 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழியில் பள்ளி நேரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக மண் ஏற்றி சென்ற லாரிகள் சிறை பிடிக்கப்பட்டன.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழியில் பள்ளி நேரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக மண் ஏற்றி சென்ற லாரிகள் சிறை பிடிக்கப்பட்டன.

சாலை விரிவாக்க பணி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் கொள்ளிடம் முதல் கருவி வரை புறவழிச்சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இந்தப் பணிக்காக சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் பகுதியில் இருந்து மண் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தினம்தோறும் 100-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் பாதுகாப்பற்ற முறையில் மண் ஏற்றி செல்லும் லாரிகளால் அடிக்கடி விபத்துகளும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

சிறைபிடிப்பு

இதையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பள்ளி நேரங்களில் புறவழிச் சாலைகளுக்காக மணல் லாரிகள் இயக்கக் கூடாது என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் திருமுல்லை வாசலில் இருந்து அதிகமாக மண் ஏற்றி கனரக வாகனங்கள் சென்றுள்ளது.

அந்த வாகனங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில வர்த்தக அணி துணை செயலாளர் விஜய ரெங்கன் தலைமையில், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் ஆதி மோகன், நிர்வாகிகள் வைத்தியநாதன், சிவக்குமார், இளையராஜா, மாரி, கலியபெருமாள் உள்ளிட்டோர் 3 கனரக லாரிகளை தடுத்து சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போராட்டம்

மேலும் பள்ளி நேரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக மண் ஏற்றி வந்த 3 கனரக வாகனங்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போராட்டத்தால் சிறிது நேரம் மயிலாடுதுறை - சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகி விஜயரெங்கன் கூறுகையில், சீர்காழி நகர் பகுதியில் ஏற்கனவே வாகன நெரிசலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளி நேரங்களில் புறவழிச் சாலை பணிகளுக்காக அளவுக்கு அதிகமான மண்ணை ஏற்றிக்கொண்டு பாதுகாப்பற்ற முறையில் செல்லும் மணல் லாரிகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. மேலும் மாணவர்கள் குறித்த நேரத்திற்கு பள்ளி செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்காததால் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம். இனிவரும் காலங்களில் பள்ளி நேரங்களில் மணல் லாரிகள் இயக்கப்பட்டால் மாணவர்கள், பெற்றோர்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.


Next Story