திருப்பாலைவனம் அருகே 3 ஊராட்சிகளில் 15 நாட்களாக குடிநீர் வழங்கப்படாததால் பொதுமக்கள் அவதி


திருப்பாலைவனம் அருகே 3 ஊராட்சிகளில் 15 நாட்களாக குடிநீர் வழங்கப்படாததால் பொதுமக்கள் அவதி
x

திருப்பாலைவனம் அருகே 3 ஊராட்சிகளில் 15 நாட்களாக குடிநீர் வழங்கப்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் 55 கிராம ஊராட்சிகள் செயல்பட்டு வருகிறது. இந்த ஊராட்சிகள் பெரும்பாலும் தமிழக அரசின் குடிநீர் வழங்கல் வாரியத்தின் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தி அதன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் மெதூர் கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து அதன் மூலம் பிரளையம்பாக்கம், திருப்பாலைவனம், அவுரிவாக்கம் போன்ற ஊராட்சிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் நிரப்பப்படுகிறது.

ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் ஒவ்வொரு தெருவுக்கும் குறிப்பிட்ட நேரத்திற்கு வீட்டுக்கு இணைப்புகள் மற்றும் தெருக்குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்தநிலையில் மெதூர் கிராமத்தில் இயக்கப்படும் கூட்டு குடிநீர் திட்டம் ஆழ்துளை கிணற்றில் இருந்து பிரளையாம்பாக்கம், திருப்பாலைவனம், அவுரிவாக்கம் போன்ற ஊராட்சிகளுக்கு 15 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. பொதுமக்கள் ரூ.10-க்கு நீண்ட தூரம் சென்று குடிநீர் வாங்கி வரவேண்டிய அவல நிலையில் உள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து பிரளையாம்பாக்கம் கிராம மக்கள் ஒன்று கூடி வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரை முற்றுகையிட்டனர். பின்னர் 15 நாட்களாக குடிநீரின்றி தவித்து வருவதாகவும் பெண்கள் சரமாரியாக கேள்வி கேட்டனர். பதில் சொல்ல முடியாததால் வட்டார வளர்ச்சி அலுவலர் திணறினார்.

இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறிய நிலையில் புகார் செய்தும் 15 நாட்களாக குடிநீர் கிடைக்காத நிலையில் 3 ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வழங்க கோரி சாலை மறியல் நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகமும் ஊரக வளர்ச்சி துறை மற்றும் கூட்டுக் குடிநீர் திட்ட அதிகாரிகள் குடிநீர் கிடைக்க வழிவகை செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story