கடலூரில் வீடு, வீடாக 'கியூஆர்' கோடு அட்டை ஒட்டும் பணி மாநகராட்சி சேவைகளை பொதுமக்கள் எளிதில் பெற ஏற்பாடு


கடலூரில் வீடு, வீடாக கியூஆர் கோடு அட்டை ஒட்டும் பணி மாநகராட்சி சேவைகளை பொதுமக்கள் எளிதில் பெற ஏற்பாடு
x

கடலூர் மாநகராட்சி சேவைகளை பொதுமக்கள் எளிதில் பெற வீடு, வீடாக ‘கியூஆர்' கோடு அட்டை ஒட்டும் பணி நடக்க இருக்கிறது.

கடலூர்

கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது சொத்து, குடிநீர் உள்ளிட்ட வரிகள் செலுத்துவதற்கும், அடிப்படை வசதிகள் தொடர்பான புகார்கள் தெரிவிப்பதற்கும் மாநகராட்சி அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. இருப்பினும் இணைய தள பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் வரி செலுத்துவதிலும், புகார் அளிப்பதிலும் பல்வேறு பிரச்சினைகள் இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியால், உள்ளாட்சி அமைப்புகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடலூர் மாநகராட்சி பொதுமக்கள் அலுவலகத்திற்கு வராமல், வீட்டிலேயே இருந்தபடி சேவைகளை பெறும் வகையில் வீடு, வீடாக 'கியூஆர்' கோடு அட்டை ஒட்ட ஏற்பாடு செய்யப்பட்டது.

மேயர் வழங்கினார்

இதன்படி கடலூர் மாநகராட்சி 1-வது வார்டில் சொத்து வரி, குடிநீர் வரி செலுத்தும் 1075 வீடுகள், நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, அவை அனைத்திலும் 'கியூஆர்' கோடு அட்டை ஒட்டப்பட்டது. இருப்பினும் மீதியுள்ள 44 வார்டுகளிலும் கியூ ஆர் கோடு அட்டை ஒட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக 33 ஆயிரம் 'கியூஆர்' கோடு அட்டை வரவழைக்கப்பட்டது. இதை நேற்று முன்தினம் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தூய்மை இந்தியா திட்ட பணியாளர்களிடம் வழங்கி, வீடு, வீடாக சென்று ஒட்ட உத்தரவிட்டார். அவர்கள் நேற்று வார்டு வாரியாக பிரித்து வைத்தனர். தொடர்ந்து அவர்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் 44 வார்டுகளிலும் வீடு, வீடாக சென்று கியூ ஆர் கோடு அட்டையை ஒட்ட உள்ளனர். இந்த 'கியூஆர்' கோடில் வீட்டில் வசிப்பவர்களின் பெயர், ஆதார் எண், மின்சார எண், முகவரி, தொடர்பு எண், வார்டு எண், வீட்டு எண், கட்டிடம் பயன்பாடு, இருப்பிட விவரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களும் பதிவேற்றம் செய்யப்படும்.

விவரங்கள் பதிவு செய்யப்படும்

அதன்பிறகு வீட்டில் இருந்தபடியே தங்களது மொபைலில் 'கியூஆர்' கோடை ஸ்கேன் செய்து அதன் மூலம் சொத்து வரி, குடிநீர் வரி, கடை வாடகை உள்ளிட்ட அனைத்து வரிகளையும் செலுத்தலாம். இது தவிர குடிநீர் பிரச்சினை, கால்வாய் உடைப்பு, குப்பைகள் அள்ளாமல் இருப்பது, கழிவுநீர் வடிந்து தெருக்களில் ஓடுவது, தெருவிளக்கு எரியாமல் இருப்பது, சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்துவது உள்ளிட்ட எந்த வகையான அடிப்படை பிரச்சினையாக இருந்தாலும், அதனை உடனடியாக 'கியூஆர்' கோடு ஸ்கேனில் பதிவு செய்யலாம்.

1 More update

Next Story