கடமலைக்குண்டு கிராமத்தில் ரூ.20 லட்சத்தில் தடுப்பணைகள் கட்டும் பணி
கடமலைக்குண்டு கிராமத்தில் ரூ.20 லட்சத்தில் தடுப்பணைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
கடமலைக்குண்டு கிராமத்தில் கன்னிமார் கோவில் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. கோடை காலங்களில் விவசாய கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து விடுவதால் விவசாயம் பாதிப்படைந்து வந்தது. இதனால் கன்னிமார் கோவில் ஓடையில் நீரை தேக்கி வைக்கும் வகையில் சில இடங்களில் புதிய தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த கோரிக்கையை தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், கன்னிமார் ஓடையின் குறுக்கே 2 தடுப்பணைகள் கட்ட அரசு உத்தரவிட்டு அதற்காக ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து ஓடையில் இடம் தேர்வு செய்யப்பட்டு 2 இடங்களில் தடுப்பணைகள் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு தடுப்பணை கட்டும் பணிகளை முடிக்க உத்தரவிட்டனர். தடுப்பணை கட்டும் பணி தொடங்கியுள்ளதால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.