கரூரில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


கரூரில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x

கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அதிக பாரம் ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.

கரூர்

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் 517 மனுக்கள் பெறப்பட்டன. மாற்றுத்திறனாளிகளிடம் 80 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 50 பயனாளிகளுக்கு ரூ.17 லட்சத்து 77 ஆயிரத்து 474 மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஈமச்சடங்கு

வெள்ளியணை தென்பாகம், இந்திராநகர், பச்சபட்டி ஊர்பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். மக்கள் இறந்தால் எங்கள் சுடுகாட்டில் ஈமச்சடங்கு உள்ளிட்ட காரியங்கள் செய்து வருவது வழக்கம்.

சுமார் 60 ஆண்டு காலமாக பயன்படுத்தி வரும் எங்களது சுடுகாட்டை ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து, சுடுகாட்டில் பொக்லைன் எந்திரம் மூலம் குழிதோண்டியும், முட்களை வெட்டி போட்டும் வருகிறார். எனவே அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து சுடுகாட்டிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அதிக பாரம்

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- மல்லம்பாளையம், நன்னியூர் ஆகிய இடங்களில் மணல் குவாரிகள் தற்போது அனுமதி பெற்று இயங்கி வருகிறது. மணல் குவாரிகளுக்கு தென்புறத்தில் ஊராட்சி ஒன்றிய சாலைகள், ஊராட்சி சாலைகள் உள்ளன. இந்தசாலைகளில் அதிகபட்சமாக டிப்பர் லாரி எடையுடன் மண், கனிமம் மற்றும் இதர பொருட்கள் என மொத்தம் 10 டன் மட்டுமே ஏற்றி செல்ல வேண்டும். ஆனால் அதைவிட அதிகமான எடையுடன்தான் தற்போது மணல் ஏற்றி கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இதனால் பலகோடி மதிப்புள்ள சாலைகள் பழுதாகி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி வருகிறது. எனவே அதிக பாரம் ஏற்றி செல்லும் அனைத்து டிப்பர் லாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story