ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மகளிர் திட்ட அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு கணக்கில் வராத ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
லஞ்ச ஒழிப்பு சோதனை
புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மகளிர் திட்ட அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் தான் தமிழக அரசு மகளிர் திட்டம் மூலமாக பெண்களுக்கு வழங்கப்படும் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இங்கு மகளிர் திட்ட இயக்குனராக ரேவதி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் திட்டத்திற்கு பயனாளிகளிடமிருந்து லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவர்மன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பீட்டர் மற்றும் போலீசார் அதிரடியாக இன்று மாலை 4 மணிக்கு மகளிர் திட்ட அலுவலகத்தில் நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.
ரூ.2 லட்சம் பறிமுதல்
இந்த சோதனையில் மகளிர் திட்ட இயக்குனர் ரேவதி அறையில் இருந்து ரூ.2 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்து கைப்பற்றினர். இந்த பணத்திற்கான ஆவணங்களை அவர் முறையாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைப்பற்றப்பட்ட ரூ.2 லட்சத்தை எடுத்து சென்றனர். தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.