மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை தொடங்கியது


மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை தொடங்கியது
x

கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் சி.பி. சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை தொடங்கியது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணம் தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றக்கோரி மாணவியின் பெற்றோர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனிடையே இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட்டது.

இதனடிப்படையில் சின்னசேலம் போலீசார் வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கை விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று முதல் கையில் எடுத்து தங்கள் விசாரணையை தொடங்கினர். அவர்கள் முதல்கட்டமாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் மாணவி படித்த பள்ளியான சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பொம்மையை தூக்கி போட்டு...

பள்ளியில் மாணவி கீழே விழுந்ததாக கூறப்பட்ட இடத்தையும், பள்ளியில் மாணவி தங்கி இருந்த விடுதியின் அறை, அதன் வளாகப் பகுதி ஆகியவற்றை பார்வையிட்டனர். மேலும் மாணவியின் எடைக்கு தகுந்தாற்போல் 5 அடி உயரத்தில் ஒரு பொம்மையை தயார் செய்து, ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட 3-வது மாடியில் இருந்து அந்த பொம்மையை கீழே விழுவது போன்று தூக்கிப்போட்டனர்.

அப்போது அங்கிருந்த மரக்கிளைகளை உரசியபடி பொம்மை கீழே விழுந்தது. இதன் மூலம் பொம்மையில் எந்த பகுதியில் சேதங்கள் ஏற்பட்டுள்ளது என்று பார்த்து ஒத்திகை பார்த்தனர்.

பொம்மையில் எந்த பகுதியில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதோ, அதேபோன்று மாணவியின் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை அறிந்திடும் வகையில் இதுபோன்ற முயற்சியை அவர்கள் மேற்கொண்டனர். இதுபோன்று 2 முறைக்கு மேல் ஒத்திகை பார்த்தனர்.

சக மாணவிகளிடமும் விசாரிக்க முடிவு

மேலும் மாணவி இறந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகியோரிடமும் மற்றும் பள்ளியில் பணியாற்றி வரும் சக ஆசிரியர்களிடமும், மாணவி ஸ்ரீமதியுடன் விடுதியில் தங்கி பயின்று வரும் சக மாணவிகளிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை நடத்த முடிவு செய்துள்ளனர்.


Next Story