தூத்துக்குடி தாலுகாவிலுள்ள 479 கிராமங்களுக்கு பேரிடர் உதவி உபகரணங்கள் வழங்கப்படும்:கலெக்டர்
தூத்துக்குடி தாலுகாவிலுள்ள 479 கிராமங்களுக்கு பேரிடர் உதவி உபகரணங்கள் வழங்கப்படும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
கிராம நிர்வாக அலுவலகம் திறப்பு
தூத்துக்குடி மீளவிட்டான் புதிய கிராம நிர்வாக அலுவலகம் நேற்று திறப்பு விழா நடந்தது. அந்த அலுவலகத்தை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் ஆப்தமித்ரா பயிற்சி பெற்ற தன்னார்வலர்களுக்கு அவசரகால உபகரணங்களை வழங்கி கலெக்டர் பேசுகையில்,
ஒவ்வொரு கிராமத்திலும் பேரிடர் காலங்களில் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் பொதுமக்கள் தாங்களாகவே பாதிப்புகளிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும். எனவே பொதுமக்களுக்கு அத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது உத்தரவை செயல்படுத்தும் விதமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பேரிடர்களால் பாதிக்கப்படும் கிராமங்கள் மற்றும் கடலோர கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலகங்களின் சுவர்களில் பேரிடர் கால பாதிப்ப உள்ளிட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சுவர்களில் வண்ண படங்கள் வரையப்பட்டு வருகிறது.
பேரிடர் கால உபகரணம்
மேலும் பேரிடர் மேலாண்மை குறித்து 12 நாட்கள் ஆப்தமித்ரா பயிற்சி பெற்ற தன்னார்வலர்களுக்கு பேரிடர் காலத்தில் பணிபுரிய உதவியாக 14 உபகரணங்கள் அடங்கிய பை வழங்கப்பட்டு உள்ளது. அதுபோல் முதல்கட்டமாக தூத்துக்குடி தாலுகாவிலுள்ள 479 கிராமங்களுக்கும் பேரிடர் காலங்களில் பயன்படுத்திக் கொள்ள உதவி உபகரணங்கள் அடங்கிய பை வழங்கப்பட உள்ளது' என்று கூறினார்.
முன்னதாக மீளவிட்டான் கிராம நிர்வாக அலுவலக சுவர்களில் பேரிடர் காலங்களில் செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத செயல்களின் விவரங்களை பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் வரையப்பட்ட வண்ண படங்கள் மற்றும் வாசகங்களை கலெக்டர் செந்தில்ராஜ், பார்வையிட்டார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தம்பிரான் தோழன், தூத்துக்குடி தாசில்தார் பிராபகரன், பேரிடர் மேலாண்மை தாசில்தார் வெங்கடாசலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.