

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதன்பிறகு மேற்கு, தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும். மேலும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகள், தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இந்த பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவித்து உள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் கடந்த 2 நாட்களாக விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. நேற்று விசைப்படகுகள் கடலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டன. இதனால் சுமார் 100 படகுகள் மீன்பிடிக்க சென்று உள்ளன. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை முதல் காற்றின் வேகம் சற்று அதிகரித்து காணப்பட்டது. காலையில் வெயில் அடித்தாலும், மதியத்துக்கு பிறகு வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இதனால் வரும் நாட்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.