ஆதர்ஷ் மெட்ரிக் பள்ளியில் மாணவர் தமிழ், ஆங்கில மன்றம் தொடக்க விழா
ஆதர்ஷ் மெட்ரிக் பள்ளியில் மாணவர் தமிழ், ஆங்கில மன்றம் தொடக்க விழா நடைபெற்றது.
வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் தமிழ் மன்றம் மற்றும் ஆங்கில மன்ற தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் டாக்டர் செந்தில்குமார் தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்து, பேசினார். அப்போது ஆங்கில மன்றம் மாணவர்களின் படைப்பாற்றலையும், கலைத்திறனையும் வெளிக் கொணர்வதற்கு அர்ப்பணிக்கப்பட்ட களமாகும். மாணவர்களின் இலக்கிய ஆர்வத்தை கூர்மையாக்குதல், சமூக பார்வையை விரிவாக்குதல் என்ற தளங்களில் செயல்படும் என்று ஆங்கில மன்றத்தின் சிறப்பை எடுத்துக் கூறினார்.
தாய் மொழியின் வளம்பாடும் வானம்பாடிகளாய் உளம் கொண்டு தமிழ் மன்றம் துணை நிற்கும், தாய்மொழி மூலம் தன்னம்பிக்கை ஊற்றெடுக்க தக்கதோர் வழிகாட்டியாய் செயல்படும். எனவே இம்மன்றமானது தமிழை வளர்க்க பாடுபடும், தலை நிமிர்ந்து நிற்க போராடும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் நிர்வாக இயக்குனர் ஷபானா பேகம், நிர்வாக முதல்வர் சத்தியகலா சிறப்பு விருந்தினர்களை கவுரவப்படுத்தி குத்து விளக்கேற்றினர்.
சிறப்பு விருந்தினராக தேவிலட்சுமி குணசேகரன் கலந்து கொண்டு பேசினார்.
ஆங்கில மன்றத்தின் சிறப்பு விருந்தினராக யூகரீஸ்டா கலந்துகொண்டு ஆங்கில மொழியின் முக்கியத்துவம், எளிய முறையில் கற்பதற்கும் பேசுவதற்கும் உண்டான வழிமுறைகளை எடுத்துரைத்தார்.
தமிழ் மற்றும் ஆங்கில மன்ற நிகழ்ச்சிகள் அனைத்தையும் மன்ற குழுவினர்களாகிய மாணவர்களே தொகுத்து வழங்கினர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஹாஜிரா இராம் செய்திருந்தார்.
மேலும் இந்நிகழ்வில் ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.