புதிய பள்ளி வகுப்பறை கட்டிடம் திறப்பு
புதிய பள்ளி வகுப்பறை கட்டிடம் திறக்கப்பட்டது.
தென்னிலை அருகே மொஞ்சனூர் தொட்டம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 60-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு போதிய கட்டிடம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து குழந்தைகள் நேய பள்ளிகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.31 லட்சத்து 70 ஆயிரத்தில் புதிய பள்ளி வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதையடுத்து மாணவ-மாணவிகளின் பயன்பாட்டிற்காக அந்த கட்டிடத்தை அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியை சரஸ்வதி தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் நெடுங்கூர் கார்த்தி, க.பரமத்தி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருநீலகண்டன், கிருஷ்ணமூர்த்தி (ஊராட்சிகள்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக க.பரமத்தி வட்டார கல்வி அலுவலர் சித்ரா வரவேற்றார். முடிவில் ஒன்றிய கவுன்சிலர் நவீன் ராஜ் நன்றி கூறினார். பின்னர் மாணவ-மாணவிகளுடன் எம்.எல்.ஏ. குழுபுகைப்படம் எடுத்துக் கொண்டார்.