புதுப்பெண்ணின் அண்ணன் உள்பட 3 பேர் பலியானது எப்படி?-உருக்கமான தகவல்கள்


புதுப்பெண்ணின் அண்ணன் உள்பட 3 பேர் பலியானது எப்படி?-உருக்கமான தகவல்கள்
x
தினத்தந்தி 6 July 2023 8:31 PM GMT (Updated: 7 July 2023 7:18 AM GMT)

நெல்லை அருகே திருமண வீட்டுக்கு சென்று திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் புதுப்பெண்ணின் அண்ணன் உள்பட 3 பேர் பலியானது எப்படி? என்பது குறித்து உருக்கமான தகவல்கள் கிடைத்து உள்ளன.

திருநெல்வேலி

திருமணம்

நெல்லையை அடுத்த ராமையன்பட்டி சங்குமுத்தம்மாள்புரத்தை சேர்ந்தவர் பட்டன். இவருடைய மகன் லட்சுமணன் (வயது 23), எலக்ட்ரீசியன். நேற்று முன்தினம் லட்சுமணனின் தங்கைக்கும், நாங்குநேரி அருகே உள்ள முதலைகுளத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் திருமணம் நடந்தது. மாலையில் மணமக்களை முதலைகுளத்தில் விடுவதற்காக பெண்ணின் வீட்டார் கார், வேனில் புறப்பட்டதுடன் சீர்வரிசை பொருட்களை லோடு வேனில் ஏற்றிக்கொண்டு சென்றனர். பின்னர் அங்கு வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், இரவு 10 மணிக்கு மேல் பெண் வீட்டார் ராமையன்பட்டிக்கு புறப்பட்டனர்.

காரில் மணப்பெண்ணின் அண்ணன் லட்சுமணன், உறவினர்களான ராமையன்பட்டியை சேர்ந்த சாமிதுரை (47), சங்குமுத்தம்மாள்புரத்தை சேர்ந்த ரத்தினகுமார் மகன் நவீன் (22), அவருடைய தம்பி பிரவீன் (20) உள்ளிட்ட 10 பேர் வந்தனர். காரை நவீன் ஓட்டினார்.

2 பேர் பலி

நெல்லை அருகே கன்னியாகுமரி-நெல்லை நான்கு வழிச்சாலையில் பொன்னாக்குடி பகுதியில் சாலையில் தேங்கி கிடந்த மழைநீரில் சென்றபோது, கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடி சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

இதில் சாமிதுரை, பிரவீன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் லட்சுமணன், நவீன், ராஜகோபாலபுரம் நாடார் தெருவை சேர்ந்த காமராஜ் மகன் முத்துக்குமார் (23), சங்குமுத்தம்மாள்புரத்தை சேர்ந்த கொம்பன் மகன் முத்துக்குமார் (23), ஜெயராஜ் மகன் சாம்சன் பிரபு (34), வெட்டுவான்குளத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் பத்ரகாளி (24), சங்குமுத்தம்மாள்புரத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் கண்ணன் (30), சுப்பிரமணி மகன் கண்ணன் (30) ஆகிய 8 பேர் காயம் அடைந்தனர்.

மேலும் ஒருவர் சாவு

இதுகுறித்து தகவல் அறிந்ததும் முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் லட்சுமணன் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உருக்கமான தகவல்கள்

விபத்தில் பலியானவர்கள் பற்றி உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் சாமிதுரை, இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அதில் மகள் இந்த ஆண்டு பிளஸ்-2 முடித்து நெல்லையில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் சாமிதுரை விபத்தில் பலியானது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

லட்சுமணன் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள், உறவினர்களுடன் சேர்ந்து சீர்வரிசை பொருட்களுக்கு ஏற்பாடு செய்து, அவற்றை தனது தங்கைக்கு கொடுத்து விட்டு வந்தார். அப்போது அவர் உள்பட 3 பேர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story