இந்தியா - ஜப்பான் மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


இந்தியா - ஜப்பான் மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 29 May 2023 6:25 AM GMT (Updated: 29 May 2023 6:26 AM GMT)

இந்தியா - ஜப்பான் மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

இன்று (29.5.2023) காலை டோக்கியோவில், ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு தலைவர் இஷிகுரோ நோரிஹிகோ, செயல் துணைத் தலைவர் கசுயா நகஜோ ஆகியோரை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து, ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு அளித்துவரும் ஆதாரவிற்கு நன்றி தெரிவித்து, தமிழ்நாட்டில் அதிக அளவில் தொழில் முதலீடுகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார்.

அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

வணக்கம், உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. நீங்கள் இதற்கு முன்பு NEC-இல் பணியாற்றியதாகக் கேள்விப்பட்டேன். நாங்கள் நாடு திரும்பும் முன்பு, நாளை அங்கு சென்று பார்வையிடலாம் என்று நினைக்கிறோம். JETRO இந்தியாவுடன் இணைந்து மிகவும் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க விரும்பும் ஜப்பானிய நிறுவனங்கள் தங்களது வர்த்தகச் செயல்பாடுகளை எளிதில் மேற்கொள்ள முக்கியப் பங்கை ஆற்றி வந்துள்ளது. இதனை மின்னணுவியல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ஆட்டோமொபைல், கனரக பொறியியல் உள்ளிட்ட துறைகளுக்கும் விரிவுபடுத்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

தொழில்துறை 4.0-ஐ நோக்கி - தமிழ்நாட்டில் உள்ள அதிக அளவிலான சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை முன்னேற்ற இந்தியாவின் ஐ.டி. திறன்களும் ஜப்பானின் உற்பத்தி நிபுணத்துவமும் உதவும். இதைப் போன்ற துறைகளில் நாம் ஒன்றிணைந்து செயல்பட முடியும் என நான் நம்புகிறேன் என்றார்.

இச்சந்திப்பின்போது, தமிழ்நாடு முதல்வர், மேம்பட்ட உற்பத்தியில் சிறந்த பங்குதாரர்கள் ஜப்பானியர்கள். எனவே, தமிழ்நாட்டில் திறன்மிகுந்த மனிதவளம் உள்ளதால் 4.0 போன்ற தொழில்நுட்பப் பகுதிகள் மற்றும் மேம்பட்ட உற்பத்திக்கான ஒரு மையத்தை தமிழ்நாட்டில் அமைத்திட வேண்டுமென்று கேட்டுக் கொண்டதோடு, இந்தியா - ஜப்பானிய கூட்டு உச்சி மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்திட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இச்சந்திப்பின்போது, ஜெட்ரோ தலைவர் இஷிகுரோ நோரிஹிகோ, தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள ஜப்பான் நாட்டு நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளித்து அழைப்பு விடுத்ததற்கும், ஜப்பான் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட தமிழ்நாடு அரசு அளித்து வரும் ஆதரவிற்கும் தனது நன்றியை தெரிவித்ததுடன், சென்னையில் நடைபெறவுள்ள 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றி பெற தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன், இ,ஆ,ப., தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வே.விஷ்ணு, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story