சோயா பீன்ஸ் சாகுபடி பணிகள் தீவிரம்
மணல்மேடு பகுதியில் சோயா பீன்ஸ் சாகுபடி பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
மணல்மேடு பகுதியில் சோயா பீன்ஸ் சாகுபடி பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
சோயா பீன்ஸ்
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இந்த பகுதியில் நெல், பருத்தி, வாழை, கீரை வகைகள் போன்றவை பயிரிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மணல்மேடு அருகே கிழாய், திருவாளபுத்தூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் புது முயற்சியாக சோயா பீன்ஸ் சாகுபடி செய்து வருகின்றனர்.
அதன்படி நடப்பாண்டில் சித்திரைப் பட்டத்தில் சோயா பீன்ஸ் சாகுபடி செய்துள்ளனர். இதுகுறித்து கிழாய் கிராமத்தில் சோயா பீன்ஸ் சாகுபடி செய்த விவசாயி ஒருவர் கூறுகையில், 'இந்த பகுதியில் பெரும்பாலும் நெல், பருத்தி, வாழை உள்ளிட்டவைகள் தான் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் இயற்கை இடர்பாடு மற்றும் உரிய விலை கிடைக்காததால் நஷ்டம் ஏற்படுகிறது.
புதிய முயற்சி
இதனால் தற்போது புது முயற்சியாக சோயா பீன்ஸ் சாகுபடி செய்துள்ளோம். தை மற்றும் சித்திரை மாத பட்டத்தில் சோயா பீன்ஸ் நடவு செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக சோயா பீன்ஸ் 3 மாத கால பயிர் ஆகும். இதனை சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவாகும்.
இதில் போதிய அளவிற்கு லாபம் கிடைப்பதால் இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் சோயாபீன்ஸ் சாகுபடி செய்து வருகின்றனர். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு பறித்து விற்பனை செய்தால் தான் லாபம் பார்க்க முடியும். அதனால் தற்போது 3 மாத கால பயிராக உள்ள சோயாபீன்சை இன்னும் சில நாட்களில் அறுவடை செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.