சாப்டூர் வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்


சாப்டூர் வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்
x

சாப்டூர் வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம் அடைந்து உள்ளது. இதற்காக 58 இடங்களில் 116 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடக்கிறது.

மதுரை

பேரையூர்

சாப்டூர் வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம் அடைந்து உள்ளது. இதற்காக 58 இடங்களில் 116 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடக்கிறது.

புலிகள் கணக்கெடுப்பு

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் உள்ள சாப்டூர் வனப்பகுதி 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் புலிகள், யானைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. ஸ்ரீவில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சாப்டூர் வனப்பகுதியில் புலிகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

ஆண்டுதோறும் இந்த கணக்கெடுப்பு 45 நாட்கள் நடைபெறும். சாப்டூர் வனப்பகுதியில் உள்ள 10 பீட்டுக்களில் உள்ள 58 இடங்களில், 116 கண்காணிப்பு கேமராக்கள் மரங்களில் பொருத்தப்பட்டு வருகிறது. ஒரு மரத்தில் 2 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது. இந்தப் பணியில் 40 வனத்துறை ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கேமரா மூலம் பதிவு

இந்த கேமராக்கள் தானியங்கி ஆகும்.இந்த கேமரா முன்பு புலி, மற்றும் வேறு விலங்குகளோ வந்தால் தானாகவே படம் பிடிக்கும் வசதி இதில் உள்ளது. 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த கேமராவில் உள்ள மெமரி கார்டை எடுத்து கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும்.

இதுகுறித்து சாப்டூர் வனத்துறையினர் கூறியதாவது:-

தற்போது சாப்டூர் வனப்பகுதியில் புலிகளின் நடமாட்டம், அவற்றின் எண்ணிக்கை, மற்றும் அவற்றை கண்காணிப்பது போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. புலிகள் கணக்கெடுப்புக்காக வனப்பகுதியில் உள்ள 58 முக்கிய இடங்களில் 116 கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. 45 நாட்களுக்குப் பின்பு கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் டெல்லியில் உள்ள தேசிய புலிகள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு இவற்றை ஆய்வு செய்த பின்னர் இப்பகுதியில் புலிகள் எண்ணிக்கை எவ்வளவு உள்ளது என்பது தெரியவரும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story