மின் கட்டணத்தை மறுசீராய்வு செய்ய வேண்டும்


மின் கட்டணத்தை மறுசீராய்வு செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 17 Sep 2022 6:45 PM GMT (Updated: 17 Sep 2022 6:46 PM GMT)

மின் கட்டணத்தை மறுசீராய்வு செய்ய வேண்டும் என எச்.ராஜா கூறினார்.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே பிரான்மலை மங்கை பாகர் தேனம்மை கோவிலில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பா.ஜ.க. சார்பில் சிறப்பு யாகம் நடந்தது. இதற்கு அக்கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமை தாங்கினார். கோவில் முதல் ஸ்தானிகர் உமாபதி சிவாச்சாரியார் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் வேள்விகளை நடத்தினர். முன்னதாக வடுக பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

நிகழ்ச்சிக்கு பின்னர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:- தி.மு.க. எம்.பி. ஆ.ராசா தொடர்ந்து அநாகரிமான வார்த்தைகளை பயன்படுத்தி வருகிறார். இந்துக்கள் புண்படும்படி வார்த்தைகளை உபயோகப்படுத்தி வருகிறார். இது கோபாலபுரம் குடும்பத்திற்கும் பொருந்துமா?. ஆ.ராசாவை, மு.க.ஸ்டாலின் கட்சியில் இருந்து நீக்க வேண்டும். மின் கட்டணத்தை மறு சீராய்வு செய்து ஏழை, எளியோரை பாதிக்காத வகையில் அமைக்க வேண்டும் என்று கூறினார்.

இதையடுத்து பிரான்மலை மதகுபட்டி, செல்லியம்பட்டி சாலையில் உள்ள அழகு பவனத்தில் கட்சி கொடிகளை எச்.ராஜா ஏற்றி வைத்தார்.

இதில், மாவட்ட துணைத் தலைவர் கண்ணையா, முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் செந்தில்குமார், ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் முத்து பிரகாஷ், ஒன்றிய பொதுச் செயலாளர் இளையராஜா, செந்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அக்ரி சண்முகம், விருந்தோம்பல் பிரிவு ஒன்றிய தலைவர் சிவமணி, ஒன்றிய மகளிர் அணி தலைவி சவீதா, நிர்வாகிகள் முருகேசன், கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Next Story