தீய சக்திகளை களைய வேண்டும் என்றால்12 மாவட்டங்களில் பா.ஜ.க. வளர வேண்டும்எச்.ராஜா பேட்டி
தீய சக்திகளை களைய வேண்டும் என்றால் 12 மாவட்டங்களில் பா.ஜ.க. வளரவேண்டும் என்று எச்.ராஜா கூறினார்.
மயிலம்,
வி.சி.க. எதிர்ப்பு
திண்டிவனத்தில் பா.ஜ.க. அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் தேசிய செயலாளர் எச்.ராஜா பங்கேற்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் எச்.ராஜா வருகையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, திருமாவளவன் உருவ படத்தை எரிக்க முயன்றனர். இதையடுத்து பா.ஜ.க.வினர் 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனா்.
இதனிடையே பொதுக்கூட்டத்தில் பங்கேற்க காரைக்குடியில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த எச்.ராஜாவை கடலூர் மாவட்ட எல்லையில் போலீசார் மடக்கி கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
பேட்டி
இதையடுத்து விழுப்புரத்தில் தங்கியிருந்த எச்.ராஜா மயிலம் அடுத்த பாலப்பட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு, அதன் ஒரு பகுதியாக திண்டிவனத்தில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அரசு பஸ் கண்ணாடியை உடைத்து விட்டார்கள்.
காவல்துறையினர் என்னை தொடர்பு கொண்டு பொதுக்கூட்டத்துக்கு வரவேண்டாம். உங்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது என கூறினர். இருப்பினும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தபோது போலீசார் என்னை கைது செய்தனர்.
காவல் நிலையங்களில் எப்.ஐ.ஆர். யார் மீது போட வேண்டும் என்று முடிவு செய்கின்ற அளவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வன்முறை பாதையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
மத்திய உள்துறை ஆய்வு செய்யவேண்டும்
சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ. இன்றைக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தை கையகப்படுத்தி அப்பாயிண்ட்மெண்ட் முதல் அட்மிஷன் வரை முடிவு செய்து வருகிறார். மத்திய உள்துறை விழுப்புரம், கடலூர் உள்பட 12 மாவட்டங்களிலும் வந்து ஆய்வு செய்தால் மட்டுமே எந்த அளவிற்கு மாவட்ட நிர்வாகங்களை வி.சி.க.வினர் மாற்றி உள்ளார்கள் என்று தெரியவரும். பா.ஜ.க. கூறியபடி அனைத்து இடங்களிலும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறும். எனவே இந்த தீய சக்திகளை களைய வேண்டும் என்றால் தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் பா.ஜ.க. வளர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.