கீழ்பவானி வாய்க்காலில், ஆகஸ்டு 15-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும் ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி


கீழ்பவானி வாய்க்காலில், ஆகஸ்டு 15-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும் ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி
x

கீழ்பவானி வாய்க்காலில் ஆகஸ்டு 15-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

ஈரோடு

கீழ்பவானி வாய்க்காலில் ஆகஸ்டு 15-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

சரக்கு வாகனங்கள்

ஈரோடு மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிக்காக ரூ.2 கோடியே 26 லட்சம் மதிப்பில் 33 சரக்கு வாகனங்கள் வாங்கப்பட்டு உள்ளன. இதன் சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தாா். அப்போது அவா் கூறியதாவது:-

ஈரோடு மாநகராட்சி சார்பில் 1,726 இடங்களில் ரோடு போடும் பணி நடைபெற உள்ளது. முதல் கட்டமாக தற்போது ரூ.41 கோடியே 80 லட்சம் செலவில் 628 இடங்களில் ரோடு போடும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் சாக்கடை கால்வாய் வசதி, குடிநீர் வசதி, மின் விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய தனித்தனியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்காலிக பஸ் நிலையம்

ஈரோடு மாநகர் பகுதியில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை தீர்ப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கும். தெருநாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு இடம் கொடுத்தவர்களுக்கு கண்டிப்பாக உரிய இழப்பீடு வழங்கப்படும். கீழ்பவானி வாய்க்காலில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கும், கட்டுமான பணிகளை செய்பவர்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. அனைத்து பணிகளும் நிறைவடைந்து ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி கண்டிப்பாக கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும்.

ரேஷன் கடைகளில் காய்கறி விற்பனை செய்வது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசி முடிவு செய்யப்படும். சோலார் மற்றும் கனிராவுத்தர்குளம் பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு இரண்டையும் ஒரேநேரத்தில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கனிராவுத்தர்குளம் பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க தாமதம் ஏற்பட்டால் சோலாரில் அமைக்கப்பட்டு உள்ள தற்காலிக பஸ் நிலையம் விரைவில் திறந்து வைக்கப்படும்.

நீர் மாசுபாடு

கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக நான் நியமிக்கப்பட்டு்ள்ளேன். அங்கு அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே பல்வேறு பணிகளை செய்து கொண்டு இருந்தார். அந்த பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும். சென்னிமலை அருகே உள்ள வரப்பாளையம், வாய்ப்பாடி ஆகிய 2 கிராமங்களில் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதாகவும், அந்த தண்ணீர் குடிப்பதற்கு உகந்தது அல்ல என்றும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இருந்தாலும் நிலத்தடி நீர் பாதிக்கப்படக்கூடாது. அதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அது கண்டிப்பாக எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.


Next Story