தொடர் வழிப்பறியில் ஈடுபட்டசிறுவன் உள்பட 4 பேர் கைது


தொடர் வழிப்பறியில் ஈடுபட்டசிறுவன் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 10 July 2023 2:30 AM IST (Updated: 10 July 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே வடவள்ளி, தொண்டாமுத்தூர் பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 13 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

கோயம்புத்தூர்
வடவள்ளி


கோவை அருகே வடவள்ளி, தொண்டாமுத்தூர் பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 13 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.


இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-


தொடர் வழிப்பறி


கோவை அருகே உள்ள வடவள்ளி, தொண்டாமுத்தூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர் செயின் பறிப்பு, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் தொடர் செயின் பறிப்பில் ஈடுபடும் மர்ம நபர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.


இதனைத்தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை பிடிப்பதற்காக பேரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டியன், வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாத்துரை ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.


கண்காணிப்பு கேமரா ஆய்வு


இதையடுத்து தனிப்படை போலீசார் வடவள்ளி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சம்பவம் நடந்த இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது தொடர் வழிப்பறியில் ஈடுபட்டது 4 பேர் கும்பல் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்த தொடங்கினர்.


இதையடுத்து போலீசார் பல்வேறு கோணங்களில் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவத்தையும், பழைய குற்றவாளிகளின் புகைப்படங்களையும் ஒப்பீட்டு பார்த்தனர்.

இதில் பழைய குற்றவாளிகளின் உருவத்துடன் வழிப்பறியில் ஈடுபட்டவர்களின் படங்கள் ஒத்துப்போனது.


4 பேர் கைது


தொடர்ந்து விசாரணை நடத்தியதில், தொடர் வழிப்பறியில் ஈடுபட்டது ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பழையம்பள்ளியை சேர்ந்த வாஞ்சிநாதன் (வயது 20), நம்பியூர் புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த விஜயராஜன் (19), குரும்பபாளையத்தை சேர்ந்த பச்சை என்ற ஸ்ரீகாந்த் (20) மற்றும் 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.


இந்த நிலையில் அவர்கள் 4 பேரும் சத்தியமங்கலத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்பேரில் அங்கு சென்ற போலீசார், ஒரு வீட்டில் பதுங்கியிருந்த வாஞ்சிநாதன், விஜயராஜன், ஸ்ரீகாந்த் மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 4 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பின்னர் அவர்களை கோவைக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.


13 பவுன் நகைகள் மீட்பு


விசாரணையில், இவர்கள் மீது ஈரோடு, சத்தியமங்கலம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளது.

4 பேரும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து, நகைப்பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக தங்கள் மீது ஈரோட்டில் வழக்குகள் இருப்பதால் கோவைக்கு சென்று வழிப்பறியில் ஈடுபட முடிவு செய்தனர்.

அதன்படி அவர்கள் 4 பேரும் கோவை வந்து வடவள்ளி மற்றும் தொண்டாமுத்தூர் பகுதிகளில் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.


1 More update

Next Story