சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 130 பேர் கைது
நெல்லை மேலப்பாளையத்தில் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 130 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மேலப்பாளையத்தில் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 130 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிறை நிரப்பும் போராட்டம்
20 ஆண்டுகளை கடந்த ஆயுள் தண்டனை கைதிகளை சாதி, மதம், வழக்கு பேதமின்றி விடுதலை செய்ய வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நெல்லை மேலப்பாளையத்தில் நேற்று சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரி தலைமை தாங்கினார்.
மாநில பொருளாளர் மவுலானா நாசர், இணை பொதுச் செயலாளர் ரிபாய், துணை பொதுச்செயலாளர் தாஜூதீன், மாநில செயலாளர்கள் முபாரக், இப்ராகிம், பாபு ஷாஹின்சா, அகமது கபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் துணை தலைவர் ஹிதாயத்துல்லாஹ் தொடங்கி வைத்து பேசினார். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
தள்ளுமுள்ளு-130 பேர் கைது
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேலப்பாளையத்தில் இருந்து ஊர்வலமாக பாளையங்கோட்டை மத்திய சிறையை நோக்கி புறப்பட்டனர். அப்போது அங்கிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் திடீரென்று போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து போலீஸ் வேன்களில் ஏற்றி மேலப்பாளையம் மாநகராட்சி திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த சம்பவத்தில் ெமாத்தம் 10 பெண்கள் உள்பட 130-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
உதவி கமிஷனர் காயம்
இதுதவிர சாலையில் கூடி நின்றவர்களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள். இந்த தள்ளுமுள்ளுவின் போது மேலப்பாளையம் போலீஸ் உதவி கமிஷனர் சதீஷ்குமார் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் லேசான காயமடைந்தனர். அவர்கள் முதலுதவி சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவங்களால் மேலப்பாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக தமிமுன் அன்சாரி நிருபர்களிடம் கூறுகையில், "கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை சாதி, மத, வழக்கு பேதங்கள் இன்றி விடுதலை செய்ய வேண்டும். 20 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் சிறைவாசிகளை விடுதலை செய்யும் வகையில் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டி வருகிற டிசம்பர் மாதம் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்" என்றார்.